சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்பு: இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் தீவிரம்..!

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ரிசர்வ் லைன் சிலோன் காலனியில் மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் (44) என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கான பேப்பர் குழாய் கம்பெனி உள்ளது. 2 மாடியாக உள்ள இந்த கட்டிடத்தில் அண்டர்கிரவுண்ட் குடோனாகவும், மேல்தளம் பேன்சி ரக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் பேப்பர் குழாய் தயாரிக்கும் பணிகளுக்கும், மேல்மாடி வீடாகவும் பயன்பாட்டில் இருந்துள்ளது. மேல்தளத்தில் நேற்று  வழக்கம்போல் பேப்பர் குழாய் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது.

பணியில் கட்டிட உரிமையாளர் ராமநாதன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அண்டர்கிரவுண்டில் அனுமதியின்றி ஏராளமான பேன்சி ரக பட்டாசு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டாசு வைக்கப்பட்டிருந்த பகுதியில் நேற்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து, தரைமட்டமானது. அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த நேருஜி நகரை சேர்ந்த வேல் முருகன் (37), சிலோன் காலனியை சேர்ந்த மனோஜ்குமார் (23) ஆகியோர் காயத்துடன் வெளியே தப்பி ஓடிவந்தனர்.

இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சிவகாசி, விருதுநகர் தீயணைப்பு துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் தேடும் பணியில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பட்டாசுகளை பதுவித்த உரிமையாளர் ராமநாதன், பஞ்சவர்ணம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

Related Stories: