பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் 7 மாநில பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய செயற்கு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்தாண்டில் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல், சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு குறித்து ஆலோசித்தல் தொடர்பாக பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ெதாடங்கிய இந்த கூட்டம், இன்று மாலை வரை நடைபெற்றது. கொரோனா விதிகளைப் பின்பற்றி தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்ததால், பாஜக முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வந்து கலந்து கொண்டனர். டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள், மாநில முதல்வர்கள் யோகி ஆதித்ய நாத், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ‘நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மாநில தேர்தல்களில் வெவ்வேறு பிரச்னைகள் இருந்தாலும் கூட பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அடுத்தாண்டு உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் மொத்தம் 124 தலைவர்கள் கலந்து கொண்டனர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: