முல்லை பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு..!!

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு படகில் அணை பகுதிக்கு சென்றனர். வடகிழக்கு பருவமழை வலுவடைந்ததை அடுத்து தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகள், அணை கட்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முல்லை பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆய்வு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மூர்த்தி ஆகியோர் படகில் அணை பகுதிக்கு சென்றனர்.

தேனி ஆட்சியர் முரளிதரன் மற்றும் தமிழ்நாடு, கேரள மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். முல்லை பெரியாறு அணை ஆய்விற்காக தமிழ்நாட்டில் இருந்து 4 அமைச்சர்கள் ஒன்றாக செல்வது இதுவே முதல்முறையாகும். அணையின் நீர்மட்டம் தற்போது 138 அடிக்கும் மேல் உள்ளது. மெயின் அணை, பேபி அணை, 13 ஷட்டர் பகுதி, கேலரி பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர்கள் குழு பிற்பகலில் மீண்டும் படகில் படகு குழாமிற்கு திரும்புகின்றனர். இதை தொடர்ந்து ஆய்வு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவும் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: