தீபாவளியை முன்னிட்டு ஸ்வீட், காரம் தயாரிக்க தேவையான பொருட்கள் விற்பனை சுறுசுறுப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

தீபாவளி என்றாலே சிறுவர்கள் வரை பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான். இந்நாளில் நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது வழக்கம். நடப்பாண்டு தீபாவளி நவ.4ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு கொரோனா 2 அலையால் ஜவுளிக்கடைகளில் கடந்த நான்கு மாதமாக விற்பனை குறைந்து இருந்தது. வழக்கமாக நடக்கும் வியாபாரத்தில் பத்து சதவீதம் விற்பனை மட்டுமே இருந்தது. இந்நிலையில் ஆயுதப்பூஜைக்கு பிறகு ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகை சற்று அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஜவுளிக்கடைகளும் ஜவுளிகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு குவித்து வருகின்றனர். அதேபோல் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பட்டாசு வியாபாரிகள் பட்டாசுகளை குவிக்கத் தொடங்கிவிட்டனர். இதேபோல் ஸ்வீட் ஸ்டால்களில் இனிப்பு, காரம் தயாரிக்கத் தேவையான பொருட்களையும் வியாபாரிகள் வட மாநிலங்களிலும், தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் ஸ்வீட் மற்றும் காரம் தயாரிக்க தேவையான பொருட்களின் விற்பனை சற்று அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் மளிகை வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இனிப்பு, காரம் தயாரிக்க தேவையான திராட்சை, ஏலக்காய், முந்திரி, நெய், சர்க்கரை, ஆயில், எள், ஓமம், அரிசிமாவு, மிளகாய் தூள், கடலைமாவு, மைதா, குலோப் ஜாமூன் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்படும். மகாராஷ்டிராவில் இருந்து திராட்சையும், கேரளாவில் இருந்து ஏலக்காயும், இதைதவிர உள்ளூரில் தயாரிக்கப்படும் கடலைமாவு, ஆயில், நெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது விற்பனை நல்லமுறையில் இருந்தது. கடந்தாண்டு கொரோனாவால் கட்டுப்பாடுகள் இருந்தது. அதனால் 50 சதவீத வியாபாரம் மட்டுமே நடந்தது.

நடப்பாண்டு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் 2019ம் ஆண்டை போல், நடப்பாண்டு தீபாவளி விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கிறோம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது 20 சதவீதம் வியாபாரம் நடக்கிறது. தீபாவளி நெருங்கும் வேளையில் 90 சதவீதம் வியாபாரம் நடக்கும். மைதா மாவு (ஒரு கிலோ) ரூ.60 எனவும், மிளகாய் தூள் ரூ.300 எனவும், கடலைமாவு ரூ.120 எனவும், முந்திரி ரூ.600 முதல் ரூ.750 எனவும், திராட்சை ரூ.300 எனவும், ஏலக்காய் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் எனவும், பாதாம் பருப்பு ரூ.1000 எனவும், பிஸ்தா ரூ.800 எனவும், நெய் ரூ.500 எனவும், ஆயில் ரூ.150 எனவும், எள் ரூ.250 எனவும், ஓமம் ரூ.400 எனவும், சர்க்கரை ரூ.40 முதல் ரூ.42 எனவும், இட்லி அரிசி ரூ.35 முதல் ரூ.40 எனவும், 2 பாக்கெட் குலோப் ஜாமூன் பவுடர் ரூ.100 முதல் ரூ.120 எனவும், டால்டா ரூ.80  என விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: