டபிள்யூடிஏ தரவரிசை: 13வது இடத்தில் பாவ்லா படோசா

நியூயார்க்: பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிசில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயினின் இளம் வீராங்கனை பாவ்லா படோசா, டபிள்யூடிஏ தரவரிசையில் 27ம் இடத்தில் இருந்து, முன்னேறி 13ம் இடத்தை பிடித்துள்ளார். பாரிபாஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீரர் கேமரோன் நாரியும் ஏடிபி தரவரிசையில் 26ம் இடத்தில் இருந்து, 16ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தின் இண்டியன்வெல்ஸ் நகரில் பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பைனலில் ஸ்பெயினின் இளம் வீராங்கனை பாவ்லா படோசா, பெலாரசின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் (டபிள்யூடிஏ) 27ம் இடத்தில் இருந்த அவர், அதில் இருந்து 14 இடங்கள் முன்னேறி தற்போது, 3,248 புள்ளிகளுடன் 13ம் இடத்தை பிடித்துள்ளார். இவருடன் பைனலில் மோதிய அசரென்காவும் தரவரிசையில் 32ம் இடத்தில் இருந்து 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டபிள்யூடிஏ தரவரிசையில் 9,077 புள்ளிகளுடன்முதலிடத்தில் ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லீ பார்டியும், 2ம் இடத்தில் பெலாரசின் அரைனா சபலென்காவும் (7,115), 3ம் இடத்தில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்காவும் (5,320) நீடிக்கின்றனர்.

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இங்கிலாந்தின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரம் கேமரோன் நாரி கைப்பற்றினார். நேற்று நடந்த பைனலில் இவர் ஜார்ஜியா வீரர் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கேமரோன் நாரி, ஏடிபி தரவரிசையில் 2,895 புள்ளிகளுடன் 26ம் இடத்தில் இருந்து, 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 11,430 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2வது இடத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவும் (9,630 புள்ளிகள்), 3ம் இடத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசும் (7,995 புள்ளிகள்) உள்ளனர்.

Related Stories: