கேரளாவில் கொட்டும் கனமழையால் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறப்பு!: மக்களுக்கு ரெட் அலெர்ட்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் முதற்கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. 3 தினங்களுக்கு முன்பு இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ப்ளூ அலெர்ட்  விடுக்கப்பட்டது. பின்னர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,450 கனஅடியாக அதிகரித்து, நீர்மட்டம் மேலும் உயர்ந்ததால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இடுக்‍கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்‍கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ரெட் அலெர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது. மேலும், 2018ம் ஆண்டு பெருமழைக்‍கு பின்னர்  தற்போது இடுக்‍கி அணை திறக்‍கப்பட்டுள்ளது. இடுக்‍கி அணையிலிருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்‍கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு  1 லட்சம் கனஅடி வரை திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இடுக்‍கி அணை திறக்‍கப்பட்டதையடுத்து இடுக்‍கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக விவசாய நிலங்கள், ரப்பர் தோட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

கோட்டயம், குற்றிக்கல், இடுக்கி, பத்தினம்திட்டா பகுதிகளில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளை அடித்து சென்றது.  வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகள், முகாம்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: