நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையால் கும்பக்கரை, சுருளியில் கொட்டுது தண்ணீர்: வனத்துறை அனுமதி மறுப்பால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

பெரியகுளம் / கம்பம்:  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கும்பக்கரை, சுருளி அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. வனத்துறை அனுமதி மறுப்பால் விடுமுறை தினமான நேற்று அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால், இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.

கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் வருகை தருவர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த ஏப்ரல் முதலே சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை விதித்தது. கொரோனா தொற்று குறைந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து, மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களையும் பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பக்கரை அருவியில் மட்டும் கடந்த 7 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரைக்கு வாகனங்களில் வந்தனர். ஆனால், வனத்துறை அனுமதி மறுப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் கோயில்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் அனுமதித்துள்ள நிலையில், கும்பக்கரை அருவிக்கும் செல்ல அனுமதிக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: தேனி மாவட்டத்தில் மேகமலை வன உயிரினச்சரணாலயம் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், முன்னோர்கள் நினைவு நாளை அனுசரித்து வழிபாடு செய்யும் புண்ணியதலமாகவும் உள்ளது. இரண்டு நாட்களாக சுருளி அருவி நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை பகுதிகளில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, அருவிப்பகுதிக்குள் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. அருவியின் நீர்வரத்தை மேகமலை வன உயிரினச்சரணாலயத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

மீண்டும் மூடல்

கொரோனா பரவல் காரணமாக 2020, மார்ச் முதல் மூடப்பட்ட சுருளி அருவி கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கடந்த ஏப்ரல் 19 முதல் சுருளி அருவி மீண்டும் முடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: