சென்னை ஐகோர்ட் புதிய நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் பதவியேற்பு

சென்னை: குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த, நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பொறுப்பேற்றார். உச்ச நீதிமன்ற கொலீஜியம்,கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும், 60க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணி புரிந்து வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் அரசு வக்கீல்கள், பார்கவுன்சில் மற்றும் வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பதவியேற்ற புதிய நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் பேசியாவது:  பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியற்றதில் பெருமைப்படுகிறேன். பழமையான கலாசாரத்தை கொண்ட மாநிலத்திற்கு வந்துள்ளேன். நானும், எனது பேரனும் தமிழாசிரியர் ஒருவரை வைத்து தமிழ் கற்றுக்கொள்ள போகிறோம். இதுவரை ஒரு வழக்கை கூட தள்ளுபடி செய்ததில்லை என்றார். தற்போது ஐகோர்ட் நீதிபதிகளின் ெமாத்த எண்ணிக்கை 75. புதிய நீதிபதி பொறுப்பேற்றதையடுத்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 19 இடங்கள் காலியாக உள்ளன.

Related Stories: