திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விற்பனை செய்யாமல் வெளி மாநிலங்களுக்கு கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை:கலெக்டர் தகவல்

திருவள்ளுர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கண்காணிப்பு குழுகூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது, திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டிசம்பர் முதல் வாரத்தில் கரும்பு அரவையினை துவக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள பதிவு மற்றும் பதிவில்லா கரும்பை, விவசாயிகள் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு தன்னிச்சையாக அறுவடை செய்து அனுப்புவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, தனியார் ஆலைகளுக்கு சட்டவிரோதமாக கரும்பை அனுப்பும் செயல்களில் விவசாயிகள் ஈடுபட வேண்டாம்.

தவறும் பட்சத்தில் வருவாய் வசூல் செய்யும் பிரிவின் கீழ் தனியார் சர்க்கரை ஆலையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கரும்பு கடத்தலில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பினை கடத்தி எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் பெற்றுவரும் கரும்பு விவசாயிகள் ஆந்திர மாநில தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்புவதால் நமது மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, விவசாயிகளுக்கும் பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது. எனவே, கரும்பு விவசாயிகள் அனைவரும் தங்கள் கரும்பினை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கே அனுப்பி தங்கள் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும்.  இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார். 

Related Stories: