செய்யாறு அடுத்த தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் கி.பி.10ம் நூற்றாண்டு சோழர் கால விஷ்ணு வழிபாட்டை உறுதிப்படுத்தும் ஸ்ரீ தேவி சிலை கண்டெடுப்பு: ஏரி பாசன பராமரிப்பு தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன

செய்யாறு: செய்யாறு அருகே கி.பி. 10ம் நூற்றாண்டை சேர்ந்த ஏரி பாசன பராமரிப்பு கல்வெட்டு மற்றும் ஸ்ரீதேவி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, தென்பூண்டிப்பட்டு கிராமம் பஜனை கோயில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் முட்புதர்களுக்கு இடையில் சிதிலமடைந்த சிறிய அளவிலான கல் மண்டபம் உள்ளது. சுற்றுச்சுவரில் கல்வெட்டும், அதனருகில் அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய கற்சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து களஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆர்வலருமான எறும்பூர் செல்வகுமார் தெரிவித்ததாவது: சோழ மன்னர்களின் தொண்டை மண்டல பகுதியில், வேழமலையில் இருந்து கோயில்கள் கிழக்கு, மேற்காக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, விஷ்ணுவின் அவதாரங்களில் பெருமாள் உள்ளிட்ட பெயர்களில் பல கோயில்கள் கட்டி வழிபாடு நடந்தது. கி.பி. 9 மற்றும் 10ம் நூற்றாண்டிற்கு இடையிலான கோயில்கள், கல்வெட்டுகள் ஆகியன உத்திரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை, திருவத்திபுரம், திருப்பனங்காடு, வல்லம், வந்தவாசி, எறும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமாக கிடைத்துள்ளது.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தென்பூண்டிப்பட்டு கிராமத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயில் பல நூற்றாண்டுகளாக பராமரிப்பின்றி முழுவதுமாய் சிதைந்து போய் உள்ளது. அதில் மூலவர் சன்னதி சேதமாகி முட்புதரினுள் எஞ்சி நிற்கிறது. எஞ்சி நிற்கும் கோயில் உட்சுவரை உற்று நோக்கியபோது ஒரு கல்வெட்டும், வெளிப்புற சுவரில் மற்றொரு கல்வெட்டும் இருந்தது. அதில் ஏரி பாசன பராமரிப்பு (நீர் மேலாண்மை) மற்றும் கோயில் பராமரிப்பு குறித்த தகவல் உள்ளது. அதன் தொடர்ச்சியாக கல்வெட்டுகளை காணவில்லை.

இவை கி.பி. 9 மற்றும் 10ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு. சிதிலமான கோயில் அருகில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய திருமேனி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. அது பெருமாள் சமேத தேவி சிலையென தெரிந்தது. இந்த சிலையில் நீண்ட ஜடாமணி மகுடம், காது, கழுத்தில் அணிகலன்கள், மார்பு கச்சை கட்டப்பட்டுள்ளது. இடது கையில் தாமரை மொக்கும், வலது கை தொங்கிய நிலையில் உள்ளது. அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஆடை கட்டப்பட்டுள்ளது. அடியில் சிறிய பீடம். அதன்மேல் சிலை வடிக்கப்பட்டுள்ளது. திருஉருவ மேனி கலைநயமிக்கதாகவும், சிரித்த முகத்துடனும் உள்ளது.

கல்லில் கலை வண்ணமாய் தேவி திருமேனி உள்ளது. சிதிலமடைந்து சிறிய அடையாளத்துடன் காணப்படும் அந்த இடத்தில் மூலவர் கோபுரத்தின் மேல் உச்சிக்கல், கல்லால் ஆன தேர்சக்கரம் போன்ற அமைப்பு, கருங்கற்கள் சிதறி கிடக்கிறது. சோழர்கால ஆட்சியில், கிராம நிர்வாகம், நீர் மேலாண்மை, ஏரி பராமரிப்பு, நில விற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் என அனைத்திற்கும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இவ்வூரில் ஏரி பாசன பராமரிப்பு, கோயில் பராமரிப்பு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே கண்டெடுத்த ராமர், லட்சுமணன் சிலைகளை தொடர்ந்து ஸ்ரீ தேவி சிலை கிடைத்திருப்பது சோழர் கால விஷ்ணு வழிபாட்டை உறுதிப்படுத்துகிறது. இதுகுறித்து மேலும் தொல்லியல் ஆய்வு செய்தால் பல அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: