ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்திற்கு பாராட்டு தெரிவித்த பில்கேட்ஸ் : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!!

டெல்லி : ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்திற்கு பாராட்டு தெரிவித்த பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஆயுஷ்மான் டிஜிட்டல் திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாடு முழுவதும் மருத்துவசேவைகள் டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில் சுகாதார வசதிகளை அனைவருக்கும் சமமாக கிடைக்க செய்ய ஆயுஷ்மான் டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல இந்த திட்டம் சுகாதார சேவைகளை வழங்குவதை எளிதாகும் என்றும் இந்தியாவின் சுகாதார இலக்குகளை மேம்படுத்த உதவும் என்றும் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மருத்துவசேவைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் கிடைப்பது விரைவுப்படுத்தப்படும் என்பது ஆரோக்கியமான விஷயம் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கு ட்விட்டரில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் குறித்து அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார். சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த கோணத்தில் இந்தியா கடுமையாக உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: