மேலப்பாளையம் கால்நடை சந்தையில் நுழைவுக்கட்டணம் திடீர் உயர்வு: அக்.1 முதல் அமலாகிறது

நெல்லை: மேலப்பாளையம்  கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவுக்கட்டணம்  திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அக். 1ம்தேதி முதல்  அமலாகிறது. நெல்லை மேலப்பாளையத்தில்  உள்ள கால்நடை சந்தையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் மாட்டுச்சந்தையும்,  செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் கூடுகிறது. இந்த நாட்களில்  நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில்  இருந்தும் ஆடு, மாடுகளை  வியாபாரிகள் வாகனங்களில் வந்து விற்பனை செய்வர். இவற்றை  வாங்க மக்கள் கூட்டமும் அலைமோதும். கொரோனா காலத்தில் சந்தை செயல்படவில்லை.  பின்னர் அந்தச் சாலையில் சமூக இடைவெளியுடன் சந்தை நடைபெற்றது. கடந்த சில  வாரங்களாக சந்தை மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

இந்நிலையில் கால்நடை வாரச்சந்தைக்கான நுழைவுக்கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தி  புதிய கட்டண விபரங்களை அறிவித்துள்ளது. மாற்றப்பட்ட கட்டண நடைமுறை அக்.  1ம்தேதி முதல் அமலாகிறது. வருகிற திங்கட்கிழமை சந்தைகூடும் போது புதிய  கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இதன்படி  காளைமாடு, எருமைகிடா ஒன்றுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.40ல் இருந்து ரூ.100 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. ஆடு ரூ.20ல் இருந்து ரூ.50 எனவும், லாரி ஒன்றுக்கு  ஒருமுறை  வருவதற்கு ரூ.25ல் இருந்து ரூ.100ஆகவும் ஆட்டோவுக்கு ரூ.25ல்  இருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது. கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25  ஆகவும்,  கருவாடு கூடை கட்டு ரூ.50,  தரகு கட்டணம் ரூ.50 ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று  சந்தைக்கு வந்த நபர்களிடம் மாற்றப்பட்ட புதிய கட்டண விவரம் குறித்து  மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் புதிய கட்டண விவரம்  பிளக்ஸ்போர்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பராமரிக்க வலியுறுத்தல்

வாரச்சந்தையில்  உள்ள கழிப்பறையில் தண்ணீர் வசதி செய்ய வேண்டும். உள்பகுதியில் சிறிய  கேன்டீன், வெயில், மழைக்கு ஒதுங்க நிழற்குடைகள் அமைக்க வேண்டும்.  சுகாதாரமான குடிநீர் வசதி, உள்பகுதியில் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை  பராமரிக்க வேண்டும். சந்தையின் முன்பகுதி வளாகசுவரில் உடைந்த பகுதியை  சீரமைக்க வேண்டும் என சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: