திருமங்கலம் அருகே 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

திருமங்கலம் : திருமங்கலம் அருகே புளியங்குளம் தனியார் நிலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது.திருமங்கலம் அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் நிலத்தில் பழமையான பானை ஓடுகள் இருப்பதாக சமூகஆர்வலர் முருகேசன் தகவல்படி மதுரை தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் ஆய்வு செய்தார். இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்கு கழிவுகள், எலும்பு துண்டுகள், சிறிய கற்கருவிகள், கல்வட்டம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து முனீஸ்வரன் கூறியதாவது: பெருங்கற்காலத்தை சேர்ந்த புதைந்த நிலையில் 13க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மேற்குப்பகுதியில் உடைந்த நிலையிலும், புதைந்த நிலையிலும் உள்ளன. ஒரு முதுமக்கள் தாழி சுமார் 74 செ.மீட்டர் விட்டம், இரண்டு இன்ச் தடிமன் கொண்டுள்ளது. மற்றொன்று இதை விட சிறியதாக 60 செ.மீட்டர் விட்டம், ஒரு இன்ச் தடிமனில் உடைந்த நிலையில் இருக்கிறது. இப்பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இடுகாடு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.

இடுகாடான அப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடமும் காணப்படுகிறது. கல்மேடு கட்டுமான பகுதிகள் சேர்ந்த நிலையிலும் அவர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், கருப்பு சிவப்பு கலந்த ஓடுகள் மேற்பரப்பில் காணப்படுகிறது. பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்ததற்கான சான்றாக சிதைந்த இரும்பு தாதுக்கள் காணப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மனித இனம் தோன்றி நாகரீக வளர்ச்சியோடு வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக புளியங்குளம் பகுதியில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கிறது’ என்றார்.

Related Stories: