ஒகேனக்கல் செல்ல அனுமதி மறுத்ததால் நடுரோட்டில் உருண்டு, புரண்டு போலீசாருக்கு சாபம் விட்ட சாமியார்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், நடுரோட்டில் உருண்டு புரண்ட சாமியார், போலீசாரின் குடும்பத்திற்கு சாபம் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொரோனா  பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிக்கிறது.

இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் வாகனங்களை, பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி, போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், அங்கு வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து இறங்கி வந்த நபர், தான் ஒரு சாமியார் எனவும், ஒகேனக்கல்லில் உள்ள கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் கூறியுள்ளார். தடை நீடிப்பதால் திரும்பி செல்லும்படி போலீசார் கூறினர். இதனால் ஆவேசமடைந்த அந்த சாமியார், திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டார்.

போலீசாரின் குடும்பம் இன்னும் 6மாதத்தில் நாசமாக போய் விடும் என்று சாபம் கொடுத்து விட்டு காரில் ஏறி சென்று விட்டார். இதை பார்த்த சிலர், தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். தற்போது, அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: