ஊட்டியில் சாரல் மழையால் கடும் குளிர்

ஊட்டி : ஊட்டியில் நேற்றும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழையால் குளிர் வாட்டியது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாரல் மழையும், சில சமயங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதேபோல், கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

இரவு நேரங்களில் காற்றும் அதிகமாக வீசுகிறது.இதனால், குளிர் அதிகரித்துள்ளது. தற்போது ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், சாரல் மழை மற்றும் குளிரால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பைக்காரா, சூட்டிங்மட்டம் போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: