ஆடிப்பூரத்தையொட்டி கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக. ஆடிப்பூரத்தையொட்டி இன்று கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவலை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர, ஆடி அமாவாசையான கடந்த 8ம் தேதி கடற்கரை, நீர்நிலைகள், கோயில் தெப்பங்குளங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவார்கள்.அதேபோன்று அம்மன் கோயில்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால்,கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கடந்த 7ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

அதே போன்று ஆடி அமாவாசைக்கும் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கிறது. ஆடிப்பூரத்தன்று அனைத்து கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். எனவே, பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் அன்றைய தினத்திலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆடிப்பூரம் திருவிழாவை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் இணையதளம் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: