ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

‘‘பிள்ளைகள் அமெரிக்காவில் இருப்பார்கள். இங்கு வயதான பெற்றோர்கள் வசித்து வருவார்கள். இவர்களுக்கு தன் வீட்டை விட்டு வெளிநாட்டுக்கு செல்ல மனம் இருக்காது. மகனாலோ அல்லது மகளாளோ இவர்களை அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ள முடியாது. அவர்களை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலை மற்றும் சமையல் வேலைக்கு நம்பிக்கையான ஆட்கள் கிடைக்க வேண்டும். இந்த கவலைதான் பெரும்பாலான அமெரிக்கா மகன்களுக்கு தற்போது உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம். ஹேப்பியாக இருங்கள்’’ என உற்சாகத்துடன் கூறுகிறார் ‘ஹேப்பி வேலைவாய்ப்பு மைய’த்தின் இயக்குனர் கிரேஸி என்ற மோட்சராக்கினி.

‘‘எனது பூர்வீகம் காஞ்சிபுரம் அருகேயுள்ள கிராமம். சிறுவயதிலேயே சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். இதற்காக நான் தேர்ந்தெடுத்ததுதான் இந்த வேலைவாய்ப்பு மையம்.  என் பக்கத்து வீட்டுக்கு குடிவந்த நபர் வீட்டு வேலை செய்ய ஆள் கிடைக்காமல் தவித்தார். இவர் போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2006ல் தொடங்கப்பட்டதுதான் இந்த வேலைவாய்ப்பு மையம். சமையல் வேலை, முதியோர் பராமரிப்பு, மருத்துவமனைகளுக்கு நர்ஸ் பணி, வீட்டு வேலை... என அனைத்துக்கான வேலை வாய்ப்பு மையமாகதான் இது செயல்பட்டு வருகிறது.

படித்தவர்கள் மட்டும் இல்லை படிக்காதவர்களுக்கும் அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலையை ஏற்பாடு செய்து தருகிறோம். முழுக்க முழுக்க பெண்களுக்காக நடத்தப்படும் இந்த மையத்தின் மூலம் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பெற்றுள்ளனர். இதற்காக வேலை தேடி வருபவர்களிடம் நாங்கள் பணம் எதுவும் பெறுவதில்லை. எங்கள் நிறுவனம் மூலம் வேலை பெற்றவர்கள் தினமும் 500 ரூபாய், மாதம் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்’’ என்றவர் சென்னை மட்டும் இல்லாமல் தில்லி, மதுரை, ஐதராபாத் போன்ற இடங்களுக்கும் பணிக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

‘‘தில்லி, ஐதராபாத் போன்ற இடங்களுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் அங்கு வீட்டில் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு பணிபுரிபவர்களுக்கு கட்டாயம் 6 மாதத்திற்கு ஒருமுறை சில நாட்கள் விடுமுறை தரவேண்டும் என்ற நிபந்தனைக்கு கட்டுப்பட்டால்தான் அவர்களை பணிக்கு நியமிப்போம். வேலைக்கு அனுப்பியதுடன் எங்கள் கடமை முடிந்து விடவில்லை. அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட எந்த பிரச்னைக்கும் நாங்கள் தான் பொறுப்பு. எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரிந்து இருக்காது. சிலர் அது சார்ந்த படிப்பு படித்திருப்பார்கள். குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு வரும் பெண்கள் அதிக அளவில் படித்து இருக்க மாட்டார்கள்.

அவர்களுக்கு சமையல், சுகாதாரம், முதியோர் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கிறோம். எங்கள் நிறுவனம் மூலம் பல பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை நினைக்கும் போது நான் பிறந்ததன் பலனை அடைந்துவிட்டது போல் உணர்கிறேன்’’ என்றவர் வசதியற்ற மாணவிகளுக்கு அழகுக் கலை பயிற்சியினை இலவசமாக அளித்து வருகிறார். மேலும் ஒரு தரமான முதியோர் இல்லம் அமைத்து சேவை புரியவேண்டும் என்பது தான் இவரின் லட்சிய கனவாம்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: