ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெயரை மாற்றுவதா?: பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று உலகத்தின் மிகச் சிறந்த தலைவராக விளங்கி, கணினித் துறையில் புரட்சிக்கு வித்திட்டு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெருமையை போற்றுகிற வகையில் ‘ராஜிவ்காந்தி கேல் ரத்னா’ விருது வழங்கப்பட்டு வந்தது.  உலகமே வியக்கும் வகையில் ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் 1982ல் நடத்திய பெருமை ராஜிவ் காந்திக்கு உண்டு. 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்டமான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு. இந்தப் பின்னணியில் தான் ‘ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது’ விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.

  அவரது பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதை மாற்றி வேறொருவர் பெயரில் பிரதமர் மோடி அறிவித்திருப்பது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. கடந்த கால ஆட்சித் தலைவர்களின் பெயர்களை மாற்றிக் கொண்டே போனால், இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கிற பெயரை வருகிற ஆட்சியாளர்கள் மாற்றுவதற்கு பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக அமைவது மிகுந்த துரதிருஷ்டவசமாகும்.  இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கை கைவிட்டு, வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பொருளாதார நிலையிலிருந்து நாட்டை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும். எனவே, இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப் பெற்று, மீண்டும் ராஜிவ்காந்தியின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு தொடர நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: