வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...சாய் சித்ரா சுவாமிநாதன்

‘‘நம்முடைய லட்சியக் கனவை நனவாக்கி வெற்றிபெற வேண்டுமானால் அக்கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று நம்மிடமே நாம் கேட்டுப்பார்க்க வேண்டும். லாபத்தைக் காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் நமது சிந்தனை ஏற்படுத்தப்போகும் மாற்றம் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமூகத்தில் நாம் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறோம் என்ற நினைப்பே நமக்கு ஊக்கத்தைக் கொடுத்து உந்துதலை அளிக்கும். கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நாம் செய்யும் வேலையும் சுலபமாக தெரியும், அதனோடு நெருக்கமும் கிட்டும்’’ என்கிறார் சாய் சித்ரா சுவாமிநாதன். இவர் மேட்ரிமோனி டாட் வலைத்தளம் மற்றும் கைபேசி பிரிவின் தலைமை அலுவலராக (chief portal and mobile officer at matrimony.com) பணியாற்றி வருகிறார்.

‘‘பழம் பெருமை வாய்ந்த தஞ்சாவூர்தான் எனது சொந்த ஊர். வேலை விசயமாகத்தான் சென்னைக்கு இடம்பெயர்ந்தேன். எங்கள் குடும்பத்தில் மருத்துவர்கள் அதிகம், 23 மருத்துவர்கள் உள்ளனர். எனவே குழந்தைப்பருவம் முதல் எனக்கும் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது.

இருந்தபோதும் வருடங்கள் கடந்த பின்பு, எனக்கு கணினித்துறையில் விருப்பம் ஏற்பட்டு, என் தேடலும் அதை நோக்கி திரும்பியது. தற்போது, லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கைத்துணையைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு தளத்தை உருவாக்கும் ஒரு சிறந்த பணியில் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

எனது தந்தை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை வல்லுனராக பணிபுரிந்து வந்த காரணத்தினால், அவருக்கு பணியிட மாற்றங்கள் என்பது வழக்கமான ஒன்று. நாங்களும் அவருடன் சேர்ந்து பல இடங்களுக்குப் பயணித்தோம். தரமான கல்வி மற்றும் சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தர என் பெற்றோர்கள் அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொடுத்தார்கள்.

எனக்காக அவர்கள் செய்த தியாகங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். எனது ஆங்கில மொழித் திறமை வளர, வார இறுதி நாட்களில் என்னுடைய தந்தை எனக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்தது எனக்கு இன்றைக்கும் நினைவில் உள்ளது. ஆசிரியையாக பணிபுரிந்த என் தாயார் எனக்கு கல்வி பயில்வதில் உதவி செய்து, வாழ்க்கையில் முன்னேறவும் ஊக்குவித்தார். அதேநேரம், பிற திறமைகளான கர்நாடக இசை, கீபோர்டு மற்றும் மாவட்ட அளவில் பேட்மின்டன் போட்டிகளில் நான் விளையாடவும் அவர் உறுதுணையாக இருந்தார்’’  என்றவர், படிக்கும் போது சந்தித்த சவால்களைப் பற்றி கூறினார்.

‘‘மற்றவர்களைப் போலவே எனக்கும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது சில சவால்கள் இருந்தன. அந்த சவால்களை என் கல்லூரி பேராசிரியர்களின் உதவியுடன் கடந்தேன். அவர்களுடைய வழிநடத்தலும் அறிவுரைகளும் என்னை மேம்படுத்தின என்றே சொல்ல வேண்டும். அதே போல் என் வாழ்வில் எனக்கு மிகப்பெரிய மாறுதலைத் தந்தது உடற்பயிற்சியே. கடுமையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவுமுறை ஆகியவற்றின் மூலம் நான் எனது எடையைக் குறைத்து, கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற்றேன்.

எல்லாவற்றையும்விட இது எனக்கு பொறுமை மற்றும் நம்பிக்கையை அளித்தது மட்டுமில்லாமல் அதுவே என் வாழ்க்கைமுறையானது. விடாமுயற்சி என்பதை நான் உடற்பயிற்சியில் கற்று, அதை எனது வேலையிலும் பின்பற்றுகிறேன். ஒவ்வொரு முறையும் அடுத்தக்கட்டம் நோக்கி செல்ல இது எனக்கு உத்வேகம் அளிக்கிறது’’ என்றவர் ஒரு புரோகிராமராக தன் பயணத்தை துவங்கியவர் தலைமை அலுவலரானது பற்றி விவரித்தார். ‘‘பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டில் முதுநிலை பட்டம் மற்றும் தங்கப்பதக்கம் வென்றேன்.

2000-மாவது ஆண்டு பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். தமிழ் மேட்ரிமோனி அதன் சார்ந்த நிறுவனம், மேலும் அப்போதுதான் ஆரம்பித்ததால், சில ஊழியர்கள் மட்டுமே அதில் இருந்தனர். கல்லூரி முடித்த கையோட நான் அதில் சேர்ந்ேதன். சென்னையில், தி-நகரில் ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் செயல்பட்ட எங்களின் அந்த சிறிய அலுவலகம் இப்போதும் என் நினைவில் உள்ளது.

அப்போது தமிழ் மேட்ரிமோனியில் நாங்க 5-6 பேர் மட்டுமே இருந்தோம். எங்க நிறுவனத் தலைவர் முருகவேல் ஜானகிராமன், அமெரிக்காவில் இருந்தார். இந்திய-அமெரிக்க நேர வித்தியாசத்தை மனதில் கொண்டு நாங்கள் அவருடன் அனைத்து தகவல்களையும் பரிமாறி வந்தோம்.

சொற்பமான ஊழியர்களே இருந்த காரணத்தினால், தகவல்களை பதிவேற்றம் செய்வது முதல் வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் கூறுவது என அனைத்து வேலைகளையும் நாங்களே செய்தோம். எல்லா வேலையும் நாங்களே செய்து வந்தாலும், அவற்றை நினைவுகூறும்போது இன்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது’’ என்றவர் இளையராஜாவின் தீவிர ரசிகையாம்.

‘‘வேலையைத் தவிர்த்து எனக்கு பல விஷயங்களில் ஆர்வமுண்டு, பாட்டு பாடுவது அதில் முக்கியமான ஒன்று. நான் சிறிது காலம் கர்நாடக சங்கீதம் கற்றேன். இளையராஜாவின் தீவிர ரசிகை நான். அவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு நான் தவறாமல் சென்றுவிடுவேன். கீபோர்டு மற்றும் வயலின் வாசிக்க பிடிக்கும், பயிற்சியும் எடுத்திருக்கேன். புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும், அதற்காகவே பல இடங்களுக்குப் பயணம் செய்வேன்.

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் எனக்கு அதீத ஆர்வம்உண்டு’’ என்ற சாய் சித்ரா பெண்கள் வேலை மற்றும் வாழ்க்கை இரண்டையும் சரிவர சமாளிப்பது எப்படி என்று கூறினார்.‘‘வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை. இரண்டையும் சரிவர சமாளிக்க ேவண்டும்.

எனக்கு குழந்தை பிறந்திருந்த நேரம், வேைலக்கும் சென்று கொண்டு வீட்டையும் கவனித்து, குழந்தையும் பராமரிக்க வேண்டும். எல்லாவற்றையும் சமாளிப்பது ரொம்பவே சவாலாக இருந்தது. ஒரு பெண்ணுக்கு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அவள் செய்யும் வேலையை புரிந்துகொள்ளும் நபர்கள் இருந்தால்போதும்.

அதுவே அவளது வாழ்க்கையை எளிதானதாக்கும். பெண்களுக்கென்ற தனிப்பட்ட அனுகூலங்கள் உள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டால் கண்டிப்பாக எல்லா பெண்களாலும் உயர்வான இடங்களை எட்ட முடியுமென்று நம்புகிறேன்’’ என நிறைவாக பேசி முடித்தார்.

தோ.திருத்துவராஜ்

Related Stories: