தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: ஜாக்கிசான் தகவல்

சென்னை: ஹாங்காங்கை சேர்ந்தவர் பிரபல நடிகர் ஜாக்கிசான் (67). ஏராளமான ஆக்‌ஷன் படங்களில் நடித்துள்ள அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் ஜாக்கிசானுக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தியதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராடியபோது, சீனாவுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக ஜாக்கிசான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது சீன திரைப்பட சங்க துணை தலைவராக பதவி வகிக்கும் ஜாக்கிசான், பெய்ஜிங்கில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதில் பேசிய ஜாக்கிசான், ‘சமீபகாலமாக சீனா வேகமாக முன்னேறி வருவதை பல நாடுகளுக்கு நான் செல்லும்போது உணர முடிகிறது. நான் சீன குடிமகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உலகம் முழுவதும் 5 நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக்கொடிக்கு மரியாதை கிடைக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை மிகக்குறைந்த காலத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருகிறது. அந்த கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக இருக்கிறேன்’ என்று பேசியுள்ளார்.

Related Stories: