பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு மறுப்பு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்: ஐஐடிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை ஐஐடியில் சாதி மற்றும் மத ரீதியான பாகுபாடுகள் அதிகளவில் பார்க்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா, தனது இறுதிக் கடிதத்தில், மதரீதியான பாகுபாட்டை தான் சந்தித்ததாகவும் அதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த விபின், சாதிரீதியான பாகுபாட்டிற்கு ஆளானதாக தெரிவித்து பணியில் இருந்து விலகினார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டில் முன்னேறிய வகுப்பினர் பேராசிரியர் நியமனங்களில், 154 பேர் தேவைப்பட்ட இடத்தில் 273 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 84 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 29 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. அதேபோல் பட்டியல் சமூகப் பிரிவில் 47 பணியிடங்களில் வெறும் 15 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. பழங்குடியினர் பிரிவை பொறுத்தவரை, 23 பணியிடங்களில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இதேபோன்று உதவிப் பேராசிரியர் பணியிடங்களிலும் குறைவான நியமனமே நடந்தது.சென்னை ஐஐடியில் பேராசிரியர் நியமனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹால்தர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை ஐஐடியில் பேராசிரியர் நியமனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஐஐடியில் ஆய்வு மேற்கொண்டோம். புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினோம். இங்கு பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை குறித்த விரிவான அறிக்கையை ஐஐடி நிர்வாகம், அடுத்த 30 நாட்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: