அமைச்சர் சேகர்பாபு உத்தரவையடுத்து நெல்லையப்பர் கோயிலில் 17 ஆண்டாக மூடியிருந்த மூன்று வாசல்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

நெல்லை: தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி  நெல்லையப்பர் கோயிலில் 17 ஆண்டுகள் மூடி  வைக்கப்பட்டிருந்த மூன்று நுழைவாயில்களும் நேற்று திறக்கப்பட்டன.  தமிழகத்தில் வரலாற்று பிரசித்திப் பெற்றது   நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில். இக்கோயில் சுமார் 14 ஏக்கரில்   பரந்து விரிந்து காணப்படுகிறது. சுவாமி, அம்பாள் என தனித்தனி சன்னதிகள்   அமைந்துள்ள கோயிலாகும். சுவாமி, அம்மன் சன்னதிகளை இணைப்பது சங்கிலி   மண்டபமாகும். ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான நெல்லையப்பர் கோயிலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த 7ம் தேதி பார்வையிட்டு ஆய்வு   மேற்கொண்டார்.

கோயிலில் வடக்கு வாசல், தெற்கு வாசல், மேற்கு வாசல் ஆகிய 3 வாசல்களும் 17 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளது. இதனை திறக்க அமைச்சர் ேசகர்பாபுவிடம் பக்தர்கள் சார்பில்   வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மூடப்பட்டுள்ள   வாசல்களை திறக்கவும், பக்தர்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகளை   மேற்கொள்ளவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி   நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் சார்பில் மூடப்பட்டிருக்கும் மூன்று   வாயில்களிலும் வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தினர்.

இதையடுத்து நேற்று காலையில் கோயில் அர்ச்சகர்கள் மூன்று வாசல் கதவுகளுக்கும் தீபாராதனை காண்பித்து, நாதஸ்வரம் முழங்க 17 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 3 வாசல்களையும் திறந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பிரதான வாசல் வழியாக கோயிலுக்குள் வந்து, சுவாமி  தரிசனம் செய்த பின்னர் அந்தந்த பகுதி மக்கள் 3 வாசல்கள் வழியாக  வெளியேறினர்.

Related Stories: