ஆம்பூர் பாலாறு மேம்பாலம் அருகே கால்வாய் உடைந்து சாலையில் பள்ளம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூர் : ஆம்பூர் பாலாறு மேம்பாலம் அருகே கால்வாய் உடைந்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கிருஷ்ணாபுரம், இந்திராநகர், ஜவஹர்லால் நேரு நகர், ஆனந்தா நகர், சாமியார் மடம், பி.எம்.எஸ் கொல்லை உட்பட பல்வேறு பகுதியில் வசிப்பவர்கள் பாலாற்றில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். பைபாஸ் சாலை மேம்பாலம் அருகே பாலாற்றுக்கு செல்லும் பாதையில் ராட்சத கழிவுநீர் கால்வாய்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதையொட்டி உள்ள சாலை சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆம்பூரில் பெய்த கனமழையால் ராட்சத கழிவுநீர் கால்வாயை ஒட்டி அமைக்கப்பட்ட கான்கிரீட்டால் ஆன தடுப்பு மண்ணில் சாய்ந்தது. மேலும், இந்த சாலை போடப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் பெரும் பள்ளம் தோன்றியது. தற்போது கொரோனா மற்றும் இதர காரணங்களால் இறப்பவர்களின் சடலம் அமரர் ஊர்தி அல்லது இதர வாகனங்கள் மூலம் இந்த சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது சாலையில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் பள்ளத்தால் அவ்வழியாக இருளில் செல்லும் வாகனங்கள் கவிழும் அபாய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக கழிவுநீர் கால்வாய் தடுப்பை அமைத்து சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: