இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் நில விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் விவரங்கள், ஆவணங்கள் இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கோயில் நிர்வாகம் மற்றும் சொத்துக்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கோயில் சொத்துக்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் சாலிகிராமம், காந்திநகர் பகுதியில் வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி ஆகும். அமைச்சரின் முயற்சியால் இந்த நிலம் மீட்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

மேலும் 36,000க்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் ஆகும். இந்த நிலங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பணிகள், உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வந்தது. வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ”தமிழ்நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்து கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் சரி செய்யப்பட்டது. இதன்படி கோயில் நிலங்கள் எல்லாம் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப் படுத்தப்பட்டது. மொத்தமுள்ள நிலங்களில் 72 விழுக்காடு நிலம் தற்போது இது போல பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3,43,647 ஏக்கர் நிலம் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து முதற்கட்டமாக இதன் விவரங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டது. அதாவது ‘அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா என்று அனைத்து விவரமும் 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

பொது மக்கள் இந்த விவரங்களை நேரடியாக www.hrce.tn.gov.in என்ற இணையத்திற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இணையதள பக்கத்தில் ”திருக்கோயில்கள் நிலங்கள்” என்ற பகுதியில் கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இருக்கும். கோயிலுக்கு சொந்தமான ஒத்துப்போகும் இனங்கள் அனைத்தையும் பார்க்க முடியும். கோயிலின் பெயரிலேயே அனைத்து ஆவணம், உரிமை அனைத்தும் இருக்கும். மக்கள் இதை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: