பிங்க் சாரதி!

நன்றி குங்குமம் தோழி

வேலைக்கு செல்லும் எல்லா பெண்களும் இருசக்கர வாகனத்திலோ, ஆட்டோவிலோ, கேப்பிலோ செல்ல முடியாது. பஸ்கள் தான் வேலைக்கு போகும் பெரும்பாலான பெண்களின் வாகனமாகி விட்டது. பஸ்களில் அரக்க பறக்க அலுவலகம் செல்லும் பெண்கள் அந்த கூட்ட நெரிசலில் ஆண்களின் சில்மிஷத்திற்கு ஆளாகிறார்கள். இதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அவர்கள் தினமும் பெரும் போராட்டம் பட வேண்டியுள்ளது. இனி இந்த போராட்டம் அவசியமில்லை. இடிமன்னர்கள் தொல்லை இருந்தால் பெண்களாகிய  நீங்கள் செய்யவேண்டியது ஒன்று தான். நான்கு இலக்க ஹெல்ப்லைனுக்கு போன் செய்தால் போதும்.

‘பிங்க் சாரதி’ வந்து சில்மிஷகாரர்களை அலேக்காக தூக்கிக் கொண்டு சென்று விடுவார்கள். அது என்ன பிங்க் சாரதி? அர்ஜுனனுக்கு ஒரு சாரதி போல் பெண்களை பாதுகாக்கும் வகையில் பெண் போலீசார் அடங்கிய அதிரடிப்படைதான் இந்த பிங்க் சாரதி. தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் தான் இந்த சிறப்பு அதிரடிப்படையை அறிமுகம் செய்துள்ளனர். இனி பெங்களூர் பெண்கள் தைரியமாக பஸ்களில் பயணம் செய்யலாம். அதுமட்டும் இல்லை பெண்கள் அமரும் இருக்கையில் ஆண்கள் அமர்ந்து இருந்தால், போராடி எழுந்திருக்க சொல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை.

ஒரே ஒரு போன் செய்தால் போதும், அந்தந்த இடத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் பிங்க் சாரதி குழுவிற்கு செய்தி சென்றடையும். உடனே பிங்க் வண்ணம் பூசப்பட்ட வாகனம் அடுத்த நொடி உதவி கேட்ட பெண் முன் ஆஜாராகிவிடும். பிறகு என்ன குறிப்பிட்ட அந்த நபருக்கு சிறப்பு கவனிப்பு நடக்கும். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் பிங்க் சாரதியில் 2 டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் ஒரு டிரைவர் உள்பட அத்தனை பேரும் பெண்கள். இந்த சிறப்பு வாகனத்தை முதல்வர் குமாரசாமி ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.

சுமார் 25 வாகனங்கள் பெங்களூரில் மட்டும் உலா வருகின்றன. இதற்காக ஏற்கனவே பெண்கள் உதவி எண்ணாக இருந்த 11 இலக்கு எண்ணுக்கு பதில் நான்கு இலக்கு எண்ணை அப்போதே முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். நிர்பயா திட்டத்தின் கீழ், இந்த வாகனங்கள் ரூ.56 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இனி பஸ்களின் கதவை மூடாமல் இயக்கினாலோ, பெண்களின் இருக்கையை ஆண்கள் ஆக்கிரமித்தாலோ, உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் டிரைவர்கள் பற்றியோ புகார் செய்யலாம். இது தவிர பஸ்களில் சுமார் 1000 கண்காணிப்பு கேமராக்களை நிறுவவும் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Related Stories: