காகினி

நன்றி குங்குமம் தோழி

காரைக்குடி பலகாரங்களை நினைவூட்டும் உணவகம்

‘‘காரைக்குடி செட்டிநாடு பலகாரங்களான கந்தரப்பம், பால் பணியாரம், வெள்ளை பணியாரம், இனிப்பு சீயம், பால் கொழுக்கட்டை, உட்காரை, மசாலா சீயம், கவுனி அரிசி, பூண்டு கஞ்சி, வாழை பூ வடை, அடை என அனைத்தும் பாரம்பரியம் மாறாத அதே சுவையில் மாலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை சென்னை அண்ணா நகரில் இடம்பெற்றுள்ள கோரா கண்டெய்னர் ஃபுட் ஸ்டீட் வளாகத்தில் உள்ள காகினி உணவகத்தில் சுடச்சுட பாரம்பரியம் மாறாத சுவையுடன் கிடைக்கிறது.

செட்டிநாட்டு பகுதிகளில் பெயர்போன இந்த பலகாரங்களை தயார் செய்ய  எங்கள் ஊர் சமையல்காரர்கள் சிலரை அழைத்து வந்து உணவு தயாரிப்பில் ஈடுபடுத்தி இருக்கிறோம்’’ என நம்மிடம் பேசத் தொடங்கினர் அதன் உரிமையாளர்களான ராஜலெட்சுமி-சுப்ரமணியன் இணையர்.

‘‘செட்டிநாடு உணவகம் என்றால் எல்லோருக்கும் அசைவ உணவுகள் மட்டுமே நினைவுக்கு வரும். காரைக்குடி உணவுகள் அசைவத்திற்கு மட்டுமல்ல விதவிதமான பலகாரங்களோடு, ரசம், மாங்காய் இனிப்பு மண்டி, வெண்டைக்காயோடு, மொச்சை சேர்த்த புளி மண்டி, வத்தல் குழம்பு என அனைத்துவிதமான உணவுகளுக்கும்  பெயர் போனது.

பாத்திரம் தயாரிப்பிற்கும் பெயர்போன எங்கள் ஊரில் இருந்து, பித்தளை இட்லி பானை, அண்டா, குண்டா, அரைச் சட்டி, தட்டு, தாம்பாளம், கரண்டி, டவரா, தண்ணீர் செம்பு, இரும்புச் சட்டி, தோசைக் கல் என நூறு, நூற்று ஐம்பது ஆண்டு காலப் பழமை வாய்ந்த அடிக் கனமான பித்தளை, வெங்கலம், தாமிரப் பாத்திரங்களையும் தேடித்தேடி வாங்கி வந்து உணவைத் தயாரிக்கவும் உணவு பரிமாறவும் பயன்படுத்துகிறோம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடம்புக்கு தேவையான ஆரோக்கியம், சத்துக்கள் இயல்பாய்  கிடைக்கிறது. இது எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களைக் கவர்வதுடன், இவர்கள் உணவுகளை தேடிவந்து, விரும்பி உண்கிறார்கள்’’ என்றனர்.

‘‘நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் எண்ணத்திலும், நம் மூதாதையர்கள் உண்ட உணவை, அவர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்வை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற  சிந்தனையிலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே  சென்னை விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் முதலில் உணவகத்தை தொடங்கினோம். துவக்கத்தில் பெரிய அளவில் ஆதரவில்லை. போகப்போக எங்கள் உணவகத்தின் பாரம்பரியம் அறிந்து வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். அதன் பிறகே மக்கள் நல்ல உணவுகளைத் தேடுகிறார்கள் என்ற புரிதல் வந்தது. தங்கள் குழந்தைகளையும் நல்ல உணவை உண்ண வைக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டோம்.

மைதா, வெள்ளை சர்க்கரை, பாக்கெட் எண்ணை, பாக்கெட் பால் இவற்றைத் தவிர்த்து செக்கில் ஆட்டிய கடலை எண்ணை, நல்லெண்ணெய், பசு நெய், நாட்டுச் சர்க்கரை, பனங் கருப்பட்டி, பச்சரிசி,  ஈரோடு, சேலம், மேச்சேரி பகுதிகளில் விளையும் உணவு தானியங்களை அதன் விளைவிடங்களிலே வாங்கி பயன்படுத்துகிறோம். இவைகள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை. அத்துடன் மூலிகைகள், நவதானியங்களை சேர்த்து, சாப்பிடும் தரத்தில் உணவைத் தயார் செய்கிறோம்.

கம்பஞ் சோறு, கம்பங்கூழ், வரகு கஞ்சி, சோளச் சோறு, ராகி களி, சோள அடை என அனைத்து மில்லட் வகை உணவுகளும் எங்களிடம் கிடைக்கும். நமது பாரம்பரிய அரிசிகளில் இருந்து தினம் ஒரு இட்லி, தோசை, வெண்பொங்கல், கொழுக்கட்டை, இடியாப்பம், பாயசம், அல்வா, மைசூர் பாகு, லட்டு, முறுக்கு போன்றவை செய்தும் விற்பனை செய்கிறோம். மூதாதையர்கள் பயன்படுத்திய 4000ம் வகை அரிசியில் 2800 வகை அரிசிகளை நாம் இழந்திருக்கிறோம். பயன்பாட்டில் இருப்பவை 60 முதல் 70 வகை அரிசிகளே.

பயன்பாட்டில் இல்லாத அரிசிகளையும் தேடிக் கண்டுபிடித்து உணவுகளை தயார் செய்கிறோம். சர்க்கரவள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, ராகி மற்றும் மக்காச் சோளத்தில் அடை தயாரிக்கிறோம். எங்களின் இட்லிப் பானையில் ஒரு அடசல்தான்

அதாவது ஒரு தட்டுதான் இருக்கும்.

இப்படிச் செய்வதால் நீராவி நேரடியாக இட்லியில் பட்டு அதன் சுவை தனித் தன்மையோடு இருக்கும். வாதநாராயணன், முசுமுசுக்கை, கல்யாண முருங்கை, ஆரா கீரை, நெருஞ்சி, பிரண்டை, அம்மான் பச்சரிசி, முள்ளு முருங்கை, பசலை, செம்பருத்திப் பூ, ஆவாரம் பூ, வல்லாரை, தூதுவளை, சக்ரவர்த்தினி கீரை, சுக்கா கீரை, நித்திய கல்யாணி, கீழா நெல்லி, அகத்தி என அனைத்து மூலிகைகளையும் பயன்படுத்தி சூப் தயார் செய்து விற்பனை செய்கிறோம். குழந்தைகளும் விரும்பி குடிக்கிற மாதிரியான சுவையில் இருப்பதால் அவர்களும் ரசித்து சுவைக்கிறார்கள். எங்கள் உணவின் ருசியும், தரமும் பிடித்த பிறகே இங்கு கடை வைக்க எங்களை அழைத்தார்கள்.

நமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர்கள் உணவு முறை, அவர்கள் வாழ்ந்த காலங்களை திரும்பிப் பார்த்தால், நாம் வாழுகிற முறையை நினைத்து பகீரென்று இருக்கும். கூட்டுக் குடும்ப முறை சிதைந்து தனியாக மாறிவிட்டோம். ஒரு குழந்தை முறையால் உறவின் ஆழத்தை உணராமல் அக்கா- தங்கை, அண்ணன்- தம்பி, அத்தை-மாமா, சித்தி- சித்தப்பா உறவு முறைகள் இல்லாத நிலை உருவாகுகிறது. இதன் விளைவாக குழந்தைகள் தன் வம்சாவளி அறியாத நிலை ஏற்படுகிறது.

வம்சாவளியோடு இணைந்ததுதான் உணவுப் பழக்க வழக்கமும். உறவுகளோடு உணவு முறையையும் சேர்ந்தே இழக்கிறோம். தவறான உணவுப் பழக்கவழக்கத்தால் நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம். விளைவு, நாகரீக மோகத்தில் நமது பாரம்

பரியத்தை இழந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை உண்பதன் வழியே நோய் தன்மை அதிகரிக்கிறது.  உடல் ஆரோக்கியம் குன்றுவதோடு, வாழும் காலமும் குறைகிறது.

நமது மண்ணிலும், சேற்றிலும் விளைந்த காய்கனிகளும், தானியமும், உணவுப் பொருட்களும்தான் நமக்கு ஏற்றவை. அதை விடுத்து பானி பூரியும், பாவ்பாஜியும், பீஸாவும், பர்க்கர், நூடில்ஸ் வகைகள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதாவில் தயாராகின்றன. இவற்றை உண்பதால் நமக்கு எந்த ஆரோக்கியமும் கிடைக்கப்போவதில்லை.

ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாக்கெட்டில் இருக்கும் சத்துக்கள் 10 ரூபாய் கடலை மிட்டாயில் கிடைத்துவிடும்.உணவை உணர்ந்தவர்கள் நல்ல உணவுகளைத் தேடி குழந்தைகளோடு எங்கள் கடைக்கு வருகிறார்கள். நாம் எதையாவது ஏன் சாப்பிட வேண்டும்? நல்ல உணவைத் தேடுங்கள். உணவை தெரிந்து சாப்பிடுங்கள். அப்போதுதான் நமது பாரம்பரியம் காக்கப்படும்… நம்ம பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் உணவைப் பார்த்து, நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள்.. இது என் உணவு’’ என்று முடித்தனர்.

ராஜசேகர், உரிமையாளர், கோரா கண்டெய்னர் ஃபுட் ஸ்டீட்சின்னக் குழந்தையில் இருந்தே நமக்குத் தேவையான உடையினை நாம்தானே தேர்வு செய்கிறோம். நம்மைவிட சிறந்த டிசைனர் இருக்க முடியுமா? அது மாதிரிதான் உணவு பழக்கமும். எதை உண்ண வேண்டும் என்பதை தேர்வு செய்வதும் நாம்தானே.

எது செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும்.அதே வேளை, கொஞ்சம் வித்தியாசத்தோடு தனித்தன்மையும் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். தேவையற்ற (scrapped) கண்டெய்னர்களை வாங்கி அவற்றை தேவைக்கேற்ற வடிவில் கடைகளாக வடிவமைத்தோம். அதன்மேல் கலர் கலராக வண்ணங்களை தீட்டி அழகுபடுத்தினோம். இரவு நேர விளக்கின்  ஒளியில், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான தோற்றத்தையும் ஈர்ப்பையும் கொடுக்கும்.

எந்த உணவாக இருந்தாலும் தயாரிப்பில் சிறந்தவர்களுக்கு மட்டுமே இங்கு கடை போட அனுமதி. தற்போது 20 வெவ்வேறு வகையான உணவகங்கள் இங்கே மாலை 4 மணியில் தொடங்கி இரவு 12 மணி வரை இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் 20 உணவகங்கள் வர இருக்கின்றன. ஒரே இடத்திலேயே அனைத்துவிதமான உணவும் மக்களுக்கு கிடைக்கும் விதத்தில் எங்கள் கோரா கண்டெய்னர் ஃபுட் ஸ்டீட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உணவு தயாரிப்பில் சுவை, தரம், ஆரோக்கியம் இவற்றில் சிறந்தவர்களாக தேர்வு செய்து, உணவை முன்பே ருசி பார்த்து பிடித்த பிறகே இங்கு கடை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் உள்ள கடைகள் அசைவ உணவுப் பிரியர்களுக்கும், ஒரு பகுதி முழுவதும் சைவ உணவுப் பிரியர்களுக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் இயற்கை காற்றை அனுபவித்தபடி அமர்ந்து சாப்பிட விரும்புபவர்களுக்கும், குளுகுளு ஏசியை அனுபவித்தபடி சாப்பிட விரும்புபவர்களுக்கும் என தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்

ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: