போபால் விஷவாயு சம்பவத்தில் தப்பிய பலாத்காரத்திற்கு ஆளான கொரோனா நோயாளி பலி: மத்திய பிரதேசத்தில் ஆண் செவிலியர் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் பலாத்காரத்திற்கு ஆளான கொரோனா நோயாளி இறந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆண் செவிலியரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் பழைய போபாலின் காசி முகாமைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், போபால் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 4ம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்த பெண், தனி வார்டில் படுத்திருந்தார். தொடர்ந்து 6ம் தேதி, மருத்துவமனையின் ஆண் செவிலியர் சந்தோஷ் அஹிர்வார், அந்த வார்டுக்கு சென்றார். தனிமையில் படுத்திருந்த அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டார்.

உஷாரான அந்த நபர், அங்கிருந்து தனது அறைக்குச்  சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து, அந்த பெண் குளியலறைக்கு சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்ற சந்தோஷ் அஹிர்வார், அந்த பெண்ணின் ஆடைகளை கழற்ற கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். நடந்த சம்பவத்தை மற்றொரு மருத்துவமனை ஊழியரான கிருஷ்ணபாயிடம் அந்த பெண் விவரித்தார். இதையறிந்த சந்தோஷ் அஹிர்வார், மருந்துவமைனயில் இருந்து தப்பிவிட்டார். கொரோனா ேநாயாளி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் பிரிவு 376ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண், கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து. வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது, தலைமறைவாக இருந்த சந்தோஷ் அஹிர்வாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி இர்ஷாத் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த போது, தனது பெயரை வெளியே தெரியப்படுத்தக் கூடாது என்றார். அதனால், முழு விசாரணை தொடர்பான விபரங்கள் வேறு யாருடனும் பகிரப்படவில்லை. அந்த பெண் கடந்த 1984ம் ஆண்டு போபால் விஷவாயு விபத்தில் தப்பித்தவர்களில் ஒருவராவார்’ என்றார்.

Related Stories: