மேற்குவங்கத்தில் 2 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்கள் இருவர், தங்கள் எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான ஆட்சி புதியதாக பதவியேற்றது. எதிர்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு வென்ற பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி, எதிர்கட்சி கட்சி தலைவாராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூச் பெஹார் தொகுதி பாஜக எம்பி நிதிஷ் பிரமணிக், ராணாகாட் தொகுதி பாஜக எம்பி ஜகன்னாத் சர்க்கார் ஆகிய இருவரும் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தின்கதா சட்டப்பேரவை தொகுதியில் நிதிஷ் பிரமணிக்கும் சாந்திபூர் தொகுதியில் ஜகன்னாத் சர்க்காரும் வெற்றி பெற்றனர். எம்பி, எம்எல்ஏ என இரு பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் ஒருவர், ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் நிதிஷ் பிரமணிக், ஜகன்னாத் சர்க்கார் ஆகிய இருவரும் தங்கள் எல்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் பீமன் பானர்ஜியிடம் அவர்கள் வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘கட்சி உத்தரவுபடி எங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தோம்’ என்றனர்.

Related Stories: