சட்டீஸ்கரில் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று 10 மாவோயிஸ்ட் கொரோனாவுக்கு பலி: தடுப்பூசி, சிகிச்சையின்றி தவிப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்டவை கிடைக்காததால் கொரோனா பாதித்த 10 மாவோயிஸ்ட்டுக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சட்டீஸ்கரின் பாஸ்டர் மாவட்டம் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாவோயிஸ்ட்டுக்களும் கொரோனா பாதிப்புக்கு தப்பவில்லை. சுமார் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுக்கள் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்கள் காலாவதியான மாத்திரைகள் உட்கொள்வதாகவும், போதுமான, ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளியில் இருப்பவர்களுடான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மாவோயிஸ்ட்டுக்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான முறையான சிகிச்சை மற்றும் மருந்து பொருட்கள் கிடைக்காததன் காரணமாக 10 மாவோயிஸ்ட்டுக்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது சடலங்கள் பாஸ்டரில் எரியூட்டப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இளம் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் சக மாவோயிஸ்ட்டுக்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

* சரணடைந்தால் இலவச சிகிச்சை

இதனிடையே சரணடையும் மாவோயிஸ்ட்டுக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்து பலர் வெளியேறி இருக்கின்றனர்.

Related Stories: