மேற்குவங்க வன்முறை சம்பவம் எதிரொலி: 77 பாஜ எம்எல்ஏக்களுக்கும் ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக, 77 பாஜ எம்எல்ஏக்களுக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவவங்க சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றிப் ெபற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி பதவியேற்றார். இந்த தேர்தலில் திரிணாமுல் 213 இடங்களையும், பாஜக கடந்த தேர்தலில் 3  இடங்களை பிடித்த நிலையில், தற்போது 77 இடங்களையும் கைப்பற்றி வலுவான எதிர்கட்சி இடத்தை பிடித்துள்ளது. மே 5ம் தேதி, மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.

நேற்று 43 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மம்தாவை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்த பாஜகவின் சுவேந்து அதிகாரி, எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க அரசியல் நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் கூட, வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் நடந்த வன்முறை சம்பவங்களால் 16 பேர் பலியாகினர். இந்த சம்பவங்களால், திரிணாமுல் - பாஜக இடையே சர்ச்சைக்குரிய கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் நடந்துள்ள வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், 77 பாஜக எம்எல்ஏக்களுக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சிஐஎஸ்எப் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் 77 பாஜக எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல், இது நடைமுறைக்கு வருகிறது. ஏற்கனவே பல பாஜக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: