மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து 8 பெட்டிகள் திருட்டு: கள்ளச்சந்தையில் விற்பனையா?

மதுரை:  தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த மருந்து தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாக இந்த மருந்து வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து இல்லை. அரசிடம் பெற்று நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றன. நோயாளிகளும் நேரடியாக உரிய  ஆவணங்களை காட்டி விலை கொடுத்து பெறுவதற்கு சென்னை போன்ற நகரங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிலர் இந்த மருந்தை பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக எழுந்த புகார்களின் பேரில் விசாரணை  நடந்து வருகிறது.

 இதற்கிடையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக இங்குள்ள மருத்து சேமிப்பு அறையில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மருந்து இருப்பு நேற்று  முன்தினம் சரிபார்க்கப்பட்ட போது, 8 பெட்டிகள் ரெம்டெசிவிர் மருந்து மாயமாகி இருந்தது தெரிந்தது. இதை யாரோ திருடிச் சென்றதும் தெரிந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துமனை டீன் சங்குமணி புகாரின்படி மதிச்சியம் போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், மருந்து கிட்டங்கி கண்காணிப்பாளர், உதவியாளர்கள், நர்ஸ்கள்,  டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கும்பல் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்று, பெரும் லாபம் பார்த்திருக்கலாம் என்று  போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories: