“பிள்ளைப் பேறு சுகமே”!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

அந்தக் காலத்தில் குழந்தை பேறு என்பது சாதாரண நிகழ்வு. குறைந்தது 4 முதல் 5 குழந்தைகளாவது வீட்டில் இருக்கும். நம் மூதாதையர்கள் காலத்தில் 8 முதல் 12  குழந்தைகள் கூட இருந்த நிலை உண்டு.

மருத்துவம் சரியாக வளராத காலத்தில் இது எப்படி சாத்தியமானது. ஆனால் இன்று? குடும்பத்திற்கு ஒன்று என பிறப்பு விகிதம் குறைந்தும், குழந்தை பேறு சிக்கலாகி நிற்கக் காரணம்? கடினமான வீட்டு வேலைகளை நிறையச் செய்து, வயல்காடு, களத்து மேடு, குளத்துக்கரை எனப் போகிற போக்கில் குழந்தை பெற்ற பெண்கள், இன்று ஒரே இடத்தில் அசையாமல், வேலை எதுவும் செய்யாமல் நோயாளியாய் மாறி இருக்கிறார்கள்.

பெரும்பாலான குழந்தை பேற்றை அறுவை சிகிச்சை தீர்மானிக்கிறது. அதற்கு முன் ஸ்கேன், ஊசி, மருந்து மாத்திரை என செலவுகள் நிறைந்த ஒன்றாய் மகப்பேறு மாறி நிற்கிறது. அரசு மருத்துவமனைகளோ சுகாதாரம் அற்ற நிலையிலும், மகப்பேறுக்கு அணுக முடியாத நிலையிலும் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளோ பெண்ணின் பிரசவத்தை லட்சங்களில் நிர்ணயிக்கின்றன.

அட போங்க, பிள்ளைப்பேறு இயல்பான விசயம் என அசால்டாய் பேசத்தொடங்கினர் சிவக்குமார்-வைத்தீஸ்வரி காதல் தம்பதியினர். அவர்களின் கரங்களில் பிறந்து ஐந்து மாதங்களே நிறைந்த குழந்தை விஹான் அழகாகத் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

விஹான் கருவில் உருவான கனத்தில் தொடங்கி, அவன் பிறந்து எங்கள் கைகளில் தவழும் வரை, நாங்கள் எதற்காகவும் மருத்துவமனையையோ, மருத்துவர்களையோ, ஆங்கில மருந்து முறைகளையோ அணுகவில்லை. இயற்கையின் போக்கில் இயல்பாய் இருந்தோம் என்கின்றனர் மகிழ்ச்சி மாறாமல். மருக்கட்டி சுகப்பிரசவத்தை பின்பற்றி, வீட்டிலேயே குழந்தையை பெற்றுக் கொண்ட தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அவர்கள் முகத்தில் இயல்பாக வெளிப்பட்டது.

சுகப்பிரசவம் என்பது கருவுற்ற எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமில்லை எனவும், மகப்பேறு அபாயகரமான ஒன்றாகவும், மருத்துவப் பரிசோதனைகள் அத்தியாவசியமானதாகவும் நம் பொதுப்புத்தியில் பதிவாகி உள்ளது.. நமது ஆங்கில மருத்துவமுறைகளும் இதையே வலியுறுத்துகின்றன.

விளைவு,  ஒரு பெண் தாய்மை அடைந்ததை உணர்ந்த தருணமே மொத்த குடும்பமும் பரபரப்படைகிறது. கருவுற்றிருப்பது உறுதியான கனத்தில் தொடங்கி, தொடர் மருத்துவப் பரிசோதனைகள், மருந்து, மாத்திரை, ஊசி என பெண் பயணிக்கத் தொடங்கு கிறாள். சில பெண்கள் தாய்மைப்பேறை கொண்டாட முடியாமல், அசைவற்று பொக்கிஷமாய் பாதுகாக்கப்படுகின்றனர்.

கர்ப்பம் அடைந்த பெண் என்ன சாப்பிட வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? நடக்கலாமா கூடாதா? குனியலாமா, வேண்டாமா? வாந்தி வந்தால் என்ன மாத்திரை எடுக்க வேண்டும்? மயக்கம் வந்தால் என்ன ஊசி போட வேண்டும்? இப்படி அனைத்தும் மருத்துவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் குறித்தும் ஸ்கேன், ஊசி, மருந்து என்று பத்து மாதம்வரை தொடரும்.

குறிப்பிட்ட தேதியில் வலி வரவில்லை என்றால், வலி வர ஊசி. எதிர்பார்த்த நாளுக்கு முன்பு வலி வந்தால் வலி நிற்க ஊசி என, மருத்துவ முன்னேற்றங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளியே எடுக்கப்படும்.

இப்போதெல்லாம், ‘சிசேரியன்’ என்கிற வார்த்தை சர்வசாதாரண ஒன்றாக மாறி நிற்கிறது. விளைவு, பெண்ணுடல் வாழ்நாள் முழுவதும் அவஸ்தையை அனுபவிக்கிறது. தாய்மைப் பேற்றுக்கான செலவுகளும் ஐம்பதாயிரத்தில் தொடங்கி ஒரு லட்சத்தை தொட்டு நிற்கிறது.

இவை எதுவுமே தேவையில்லை. குழந்தைபேறு மிகமிக இயல்பான ஒன்று.  தானாய் உருவான குழந்தைக்கு தானாகவே எப்படி வெளியில் வர வேண்டும் என்பது இயல்பாய் தெரியும். அதற்கான எல்லா அமைப்பும் பெண்ணுடலில் தானாகவே அமைந்துள்ளது. நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

குழந்தை பேற்றின் அடிப்படையை சம்மந்தப்பட்ட தம்பதிகள் நன்கு புரிந்து கொண்டால் தேவையற்ற பயம், குழப்பங்கள் நீங்கி சுகப் பிரசவம் சாத்தியமே. நமது திருமணமும், குழந்தைபேறும் மனித வாழ்வின் உணர்வோடு கலந்தவை. உணர்வுதான் வாழ்க்கை. அதை உணர்ந்து செயல்பட்டாலே போதும் என்கிறார் சித்த மருத்துவம் படித்த சிவக்குமார். இவர் சென்னை லயோலா கல்லூரியில் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

‘‘நாமாகவே முயன்று வயிற்றில் வளரும் நம் குழந்தை ஆணா, பெண்ணா? என்ன எடையில் இருக்கு? எப்படி இருக்கு? எனத் தேடிதேடி அறிய முயல்கிறோம். குழந்தைக்கு எதாவது ஒரு குறை என மருத்துவர் சொல்லிவிட்டால், பிறக்கும் வரை அந்த எண்ணத்துடன் பெண் தன் குழந்தையை சுமக்க வேண்டியும் உள்ளது. யாராவது ஒன்றைச் சொன்னால் அது நம் எண்ணத்தில் ஆழமாகப் பதிந்து விடும். நம் ஆழ்மன எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும் எப்போதும் சக்தி உண்டு. நமது அக வாழ்க்கை வேறு.

புற வாழ்க்கை வேறு. ஒரு செடி பூமிக்குள் இருந்து வெளியில் வர வேர்தான் மிகவும் முக்கியம். அதை உணர்ந்து நடந்தாலே பெண்ணுக்கு சுகப் பிரசவம்தான்’’ என மகிழ்ச்சியும், சந்தோசமும், கலகலப்புமாய் தொடர்ந்தனர்.

‘‘எங்கள் குழந்தை இயற்கையாகத்தான் பிறக்கணும்னு நாங்கள் முடிவு செய்தோம். அதற்காக பெரிதாய் ஒன்றும் மெனக்கெடவில்லை. குழந்தை கருவான முதல் நாளில் இருந்தே அதன் அடிப்படையை நன்கு புரிந்து கொண்டு, முழுமையாக உணரவும் செய்தோம். அனுபவம் வாய்ந்த ஒருசிலரின் ஆலோசனைகள், சுகப்பிரசவத்திற்கான பெண்ணுடல் குறித்த வகுப்பு, இவை தவிர பெரிதாக ஒன்றும் நாங்கள் செய்யவில்லை. இதை செய்யச் சொல்லி யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தவும் இல்லை’’ என்றார்.

சிவக்குமாரைத் தொடர்ந்து பேசிய அவரின் காதல் மனைவி வைத்தீஸ்வரி. ‘‘இதில் நம் எண்ணங்கள் ரொம்பவே முக்கியம். நடக்கும் என நினைத்தால் கட்டாயம் நடக்கும். பிரசவம் மறுபிறப்பு என நிறைய பேர் சொல்லி சொல்லி அதை மனதில் ஏற்றி வைத்திருக்கிறோம். இயல்பான ஒரு நிகழ்வுக்காக அதிகமாக பயமுறுத்தப்பட்டு இருக்கிறோம். இந்த பத்து மாதமும் என்னை அவர் ரொம்பவே உற்சாகப்படுத்தி தைரியப்படுத்திக்கொண்டே இருந்தார்.  

தினமும் காலையில் முருங்கைக்கீரை, பீட்ரூட், கற்றாழை, மாதுளை என எதையாவது ஒன்றை சாறு பிழிந்து தேங்காய்ப்பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்துவேன். மேலும் பப்பாளி, அன்னாசி, மாம்பழம், பேரீச்சை என எதையும் தவிர்க்காமல் மனதுக்குப் பிடித்தவற்றை எல்லாம் உணவாக எடுத்துக் கொண்டேன். சீசனுக்கு ஏற்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவாக எடுத்தேன்.

பட்டை தீட்டப்படாத (semi polished) அரிசியில் சாதம் வடித்து மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அதைத்தான் காலையில் நீராகாரமாக தினமும் குடித்து வந்தேன். ஸ்கேன், ஊசி, மருந்து என எதையும் கரு உருவானது முதல், இந்த பத்து மாதம் வரையும், அதற்குப் பிறகும்கூட எடுத்துக்கொள்ளவில்லை.

என் குழந்தை என் வயிற்றில் எப்படி இருக்கிறது என்பதை அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தேன். ஐந்தாவது மாதத்தில் குழந்தையின் அசைவு, துடிப்பு எல்லாவற்றையும் உணர முடிந்தது. குழந்தையோடு நிறையப் பேசுவதன் மூலமாகவும், இசை, பாடல், நடனம் போன்றவற்றை வானொலி, தொலைக்காட்சியில் கேட்டு ரசிப்பதன் மூலமாகவும், அமைதியான சூழல் மூலமாகவும் குழந்தையோடு எங்களைத் தொடர்புப் படுத்திக் கொண்டே இருந்தோம். நல்ல புத்தகங்களை தேடிப் படித்தேன்.

தொலைக்காட்சி தொடர்களை தவிர்த்தேன். சினிமா, பார்க், பீச் என எல்லா இடங்களுக்கும் சென்றோம். 7வது மாதத்தில்தான் வயிறு தெரியத் தொடங்கியது. 9வது மாதம் தொடங்கியதுமே இருவரும் இணைந்து  மகப்பேறுக்கான லேகியங்களை தயார் செய்யத் தொடங்கினோம்.

மூலிகைகளில் பல அற்புத விசயங்கள் நிறைந்து உள்ளது. 25 விதமான மூலிகைகளை தேடிக்கொண்டு வந்து நிழலில் காயவைத்து பொடியாக்கி, அத்துடன் கலப்படமற்ற சுத்தமான நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லாம் இணைத்து லேகியம் தயார் செய்தோம். என் கணவர் சித்த மருத்துவம்  படித்திருப்பதால் லேகியத்தை சுலபமாகத் தயார் செய்தார்.

மகப்பேற்றில் பெண் இழக்கும் அத்தனை சத்துக்களையும்  இந்த லேகியம் மீட்டெடுக்கும். குழந்தை பிறந்த ஓராண்டுவரை இதை உண்ணலாம்.  இந்த மூலிகைகளில் இருந்துதான் ஆங்கில மருந்துகள் தயாராகின்றன. லேகியத்தால் உடல் சோர்வு நீங்கி, தாய்ப்பால் நன்றாக சுரக்கும். நம் அறியாமையால், இவற்றைப் பெரிதாக நினைக்காமல், முன்னோர்கள் சொல்லிய பல விசயங்களை பின்பற்றாமல் விட்டுவிட்டோம்.

பெண் தன் உடல் அமைப்பை, உடல் இயங்கும் முறையை முதலில் அறிதல் வேண்டும். மாதவிலக்கு, கருவுறுதலில் தொடங்கி பிள்ளைப்பேறுவரை தங்கள் உடலில் தோன்றும் மாற்றங்கள்வரை என்னதான் உடலுக்குள் நடக்கிறது என்கிற முழுமையான புரிதல் இருத்தல் வேண்டும். பிரசவம்தானே என நாங்கள் சாதாரணமாய் இருக்கவில்லை. என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்... அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை முன்பே அறிந்து அனைத்துக்கும் தயாராகவே இருந்தோம்.

குழந்தை பிறந்த பத்தாவது நிமிடத்தில் பெண்ணுடலில் இருந்து பிறப்பு உறுப்பு வழியே வெளியேறும் குழந்தையின் தொப்புள் கொடியோடு இணைந்த நஞ்சுத் தட்டைப் பாதுகாக்க துளசி, வேப்பிலை, மஞ்சள் இவற்றை காயவைத்து அரைத்து முன்பே எடுத்து வைத்தோம். அத்துடன் நச்சுத் தட்டைப் பாதுகாக்க சுத்தமான காட்டன் துணியில் பை தைத்து தயார் செய்தோம்.

நம் குழந்தை வயிற்றுக்குள் நச்சுத் தட்டில்தான் உட்கார்ந்து இருக்கும். குழந்தையை சுற்றி தண்ணீர் இருக்கும். அதுவே பனிக்குடம் எனப்படுகிறது. தாய் உண்ணும் அனைத்து உணவுகளும் குழந்தைக்கு நேராகச் செல்லாமல் நச்சுத் தட்டை முதலில் அடைந்து அங்கிருந்து உணவில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் நீக்கப்பட்டு தேவையான சத்து மட்டும் குழந்தையின் தொப்புள் கொடி வழி செல்லும்.

இது இயற்கையாய் நிகழும் நிகழ்வு. குழந்தை பிறந்ததுமே  நஞ்சுத் தட்டோடு இணைந்துள்ள குழந்தையின் தொப்புள் கொடி தானாக காயத் தொடங்கும்.  குழந்தை தன் காலால் தள்ளி தள்ளி தன்னுடைய தொப்புள் கொடியை நச்சுத் தட்டில் இருந்து நீக்கி எடுத்துவிடும். அதற்கான அறிதலும், இயல்பும் குழந்தைக்கு தானாக உண்டு.

எங்கள் குழந்தை விஹான் பிறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு எனக்கு லேசாக வலிக்கத் துவங்கியது. அந்த வலி விட்டுவிட்டு வந்தது. குழந்தை பேற்றுக்கான அறிகுறி எனக்குத் தெரியத் தொடங்கியது.  வெளியில் வர குழந்தை இயல்பாக முயலும். அப்போது தானாகவே தலை திரும்பி வெளியில்வர முயற்சிக்கும்.

இயற்கை அவ்வாறே பெண்ணுடலை வடிவமைத்திருக்கிறது. குழந்தை வெளியில் வர இடுப்பு எலும்பு சற்றே விலகியும் விரிந்தும் கொடுக்கும். அந்த வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.  அது நூறு மடங்கு வலி நிறைந்தது. அதனாலேயே மறுபிறப்பு, செத்து பிழைப்பது என்றெல்லாம் சொல்கிறார்கள். இயல்பான பிரசவத்தில் குழந்தையின் தலை திரும்புவதை பெண்ணால் நன்றாகவே உணர முடியும்.

நான் அதை முழுமையாக உணர்ந்தேன். அப்போது குழந்தை வெளியேறுவதற்கான ஊந்துதலை நாமும் இயல்பாகச் செய்யத் தொடங்குவோம். குழந்தை பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்போது ஏற்படும் வலி தாங்கக் கூடியது. அப்போது கண்ணை மூடி குழந்தையின் அசைவை, என் வயிற்றுக்குள் நடப்பதை நான் முழுமையாக உணர்ந்தேன். அவர் என்னை அப்போது தைரியப்படுத்திக்கொண்டே இருந்தார்.

என்னை அவசரப்படுத்தவோ பயமுறுத்தவோ செய்யவில்லை. அந்த நேரம், கர்ப்பப் பை வாய் இயல்பாய் திறந்து குழந்தை வெளியில் வருவது நமக்குத் தெரியும். முதலில் குழந்தையின் முடி கொஞ்சமாக தெரிந்தது.  என் குழந்தையின் தலையை நானே தொட்டு உணர்ந்தேன். குழந்தை வெளியேறும் பெண் பிறப்புறுப்பின் கீழ்பகுதி தானாகவே கிழிந்து குழந்தை தானாகவே வளைந்து வந்து கைகளில் விழும். எத்தனை இயல்பான நிகழ்வு இது. அதை நாங்கள் உணர்ந்த அந்த தருணம் சிறப்பானது. இயற்கை எவ்வளவு அழகானது. எல்லா ஆணும் பெண்ணும் இதை உணர வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்த சிவக்குமார், ‘‘விளையாட்டுத் தனமாக நாங்கள் இதைச் செய்யவில்லை. ஒரு வருடமாக எனக்கு என் குழந்தை மற்றும் மனைவியைப் பற்றிய சிந்தனை மட்டுமே நிறைந்திருந்தது. என் குழந்தை இயற்கையாக பிறக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவான புரிதலோடு, அதற்கான முழு அர்ப்பணிப்புடன் எல்லாவிதத்திலும் தயாரானோம். மகப்பேற்றில் அனுபவம் நிறைந்த பெண்களை அணுகி, அவர்களது அனுபவங்களை அறிந்து கொண்டேன். குழந்தை பேறு என்பது சாதாரண நிகழ்வல்லதான்.

தாயின் வயிற்றில் இருந்து தானாக வெளியேறுவதையும், பிறந்ததும் பால் குடிப்பதையும் குழந்தைக்கு யார் சொல்லித் தருவது. எல்லாமே இயற்கையாக படைக்கப்பட்ட இயல்பான நிகழ்வுகள். அதை ஏன் நாம் செயற்கையாக மாற்றுகிறோம். பிள்ளைப்பேறு ஒன்றும் அத்தனை பயங்கரமும் அல்ல. குழந்தைப் பேற்றை உணர்ந்து ரசித்து புரிந்து நடந்தால், குழந்தையை கையில் எடுக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதி. அதனாலே அது சுகப் பிரசவம். அந்த சுகத்திற்கு ஈடில்லை. அது வலி அல்ல இன்பம்.

இது எங்கள் விருப்பம். இதைச் செய்யுங்கள் என யாரையும் நாங்கள் வலியுறுத்தவில்லை. குழந்தைபேற்றுக்கான சரியான புரிதலும், அதற்கான தெளிவும் எங்களுக்கு இருந்தது.  நாங்கள் இயற்கையை நேசிக்கிறோம். ஆராதிக்கிறோம். செயற்கைத்தனங்களில் இருந்து விடுபட்டு, இயற்கையோடு இணைந்து வாழவே விரும்புகிறோம்.

ஆண், பெண் உடலமைப்பை பற்றி புரிந்து தெரிந்து முயன்றதால் எங்களுக்கு இதில் பயமில்லை. தாம்பத்யம் என்றாலே அன்புதான். அது வன்முறையோ வெறுப்போ இல்லை. உடம்பை பற்றி தெரிந்து கொண்டால் நோய் வராது. மனதைப் பற்றி தெரிந்து கொண்டால் வாழ்வில் பிரச்சனை வராது. இயற்கை வழியில் நடக்கும் எவருக்கும் இனிய சுகப்பிரசவம் சாத்தியமே’’ என முடித்தனர்.

மகேஸ்வரி நாகராஜன்

ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: