70 வயதிலும் குழந்தை பெற்று, 130 வயது வரை சுறுசுறுப்பாக வாழலாம்!

நன்றி குங்குமம் தோழி

பாகிஸ்தானின் வடக்கு எல்லையில், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இமயமலை பக்கத்திலேயே காரகோரம் பனிமலை, திரும்பிப் பார்த்தால் ஹிந்துகுஷ் மலைத்தொடர். இந்த மலைத் தொடர்கள் சந்திக்கும் இடத்தின் நடுவே சிந்து நதியும், கில்கிட் ஆறும் சங்கமிக்கின்றன. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அழகிய இயற்கைக் காட்சிகளின் மத்தியில் ஹன்சா பள்ளத்தாக்கு (Hunza Valley) அமைந்திருக்கிறது.

சுற்றி இருக்கும் இடம் மட்டும் அல்ல, அங்கு வாழும் மக்களும் பேரழகுதான். 50 வயது நிரம்பியவரும் 30 வயது தோற்றத்துடன் இளமையாய் தோன்றுகின்றனர். அழகு மட்டும் இல்லை, உலகிலேயே அதிகமான ஆயுட்காலமும், ஆரோக்கியமும் கொண்டு ஹன்சா பள்ளத்தாக்கில் சுமார் 85,000 மக்கள் அமைதியாய் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியினர் ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழ்வதை கண்டு வியந்த மானுடவியலாளர்கள், இதற்கான காரணத்தை ஆராயும்போது, ஹன்சா மக்கள் இயற்கையின் வழியில் தங்கள் வாழ்வுமுறையை அமைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வதால்தான் இந்த உலகிலேயே ஆரோக்கியமாக அதிக நாட்கள் உயிர் வாழக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இத்தனைக்கும் இவர்கள் தினமும் ஜிம் செல்வது கிடையாது, சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது கிடையாது. அதற்கான பணமும் இவர்களிடம் கிடையாது. பெண்கள் மேக்-அப் செய்யாமல், அழகு நிலையங்கள் என எங்கும் போகாமலே உலகிலேயே அழகான பெண்கள் என்ற பெருமையுடன் சாதாரணமாக வாழ்கின்றனர். இந்த பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, இயற்கை வளங்களை அளவாக பயன்படுத்தி வாழ்கின்றனர்.

நம் ஊரில் 50 வயதை தாண்டினாலே சீனியர் சிட்டிசன் பட்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஹன்சா பள்ளத்தாக்கில் 70 வயது பெண்களும் குழந்தை பெற்றெடுக்கின்றனர். 90 வயது வரைகூட மாதவிடாய் நிற்பது இல்லையாம். ஹன்சா மக்கள் சராசரியாக 130 வயது வரை சுறுசுறுப்புடன் எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் உயிர்வாழ்கின்றனர்.

இதற்கு காரணம் இவர்கள் வாழும் இடமும் இவர்கள் வாழ்வுமுறையும்தான். தினமும் பழமும் காய்கறிகளும் தானியங்களும்தான் இவர்களின் முக்கிய உணவு. பதப்படுத்தப்பட்ட உணவுகளோ அல்லது அதிக நேரம் சமைத்த உணவுகளோ அங்கு சாப்பிடுவது இல்லை. வருடத்தில் இரண்டு மாதம், வெறும் பழங்களையும், பழச்சாறுகளையும்தான் முழு நேர உணவாக சாப்பிடுவார்கள். வால்நட், அவகேடோ, ஹேசில்நட் போன்ற நட்ஸ் வகைகளும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இவர்களின் இந்த ரகசியத்திற்கு முக்கிய காரணம் பாதாமி பழங்கள்தான் என அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். Apricots என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதாமி பழங்களை அதிகம் உண்கின்றனர். கோடை நேரத்தில் ஹன்சா பள்ளத்தாக்கிற்கு சென்றால், அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் பாதாமி பழங்கள் வெயிலில் உலர்ந்துகொண்டிருக்கும். பாதாமி விதைகளிலிருந்து பாதாமி எண்ணை எடுத்து, உணவிற்கு அதைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இறைச்சியை சிறப்பு நாட்களின் போது மட்டும் சிறிய பங்கில் உட்கொள்கின்றனர். முட்டை மற்றும் பால் பொருட்களை தினமும் தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்கின்றனர். இவர்களின் முக்கிய வேலை விவசாயம்தான். அதனால் உடல் உழைப்பில் குறைவில்லை. மலை பகுதிகளில் வாழ்வதால் தினமும் பல மைல் தூரம் நடக்கின்றனர். 15 கி.மீ முதல் 20 கி.மீ வரை இவர்களால் சாதாரணமாக நடந்து செல்ல முடியும். இங்கு எந்த விதமான மாசுபாடும் கிடையாது. எந்த விதமான நோய்களும் கிடையாது.

ஹன்சா மக்களில் ஒருவருக்குக் கூட இதுவரை கேன்சர் நோய் வந்தது இல்லை.என்னதான் இயற்கையுடன் பழமையான வாழ்வுமுறையை பின்பற்றினாலும், ஹன்சாவினர் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அங்கு வாழும் பெண்களும், விரும்பிய மேல் படிப்பினை படிக்கின்றனர். ஆண்களுக்கான வேலை எனச் சொல்லப்படும் தச்சு வேலையையும் அப்பெண்கள் கற்று பழகுகின்றனர்.

இந்தப் பகுதியில் குளிர் காலத்தில், அடர்ந்த பனியுடன் ஜீரோ டிகிரியில் உறையும் குளிர் இருக்கும். அந்த சமயத்திலும் மக்கள் குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்களாம். மொபைல் போனை, உறவினர்களிடம் தொடர்புகொள்ள மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்த காரணங்களால் தான், ஹன்சா பள்ளத்தாக்கில் பெண்கள் 70 வயதிலும் கருத்தரிக்கும் உடல் வலிமையுடன் இருக்கின்றனர். 130 வயதுவரை சர்வசாதாரணமாக வாழ்கின்றனர்

எனக் கூறப்படுகிறது.

ஹன்சா மக்கள் அலெக்சாண்டர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். அங்கு கொலை, கொள்ளை என எந்த வன்முறையும் இல்லை. அடுக்கு மாடி ஆஸ்பத்திரிகளும் இல்லை, நோயாளிகளும் இல்லை.  

ஆரோக்கியமான உணவு, சுத்தமான சுற்றுச்சூழல், தினசரி உடல் பயிற்சி. இதுவெல்லாம் தான் மனிதனை ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுட்காலத்துடன் மகிழ்ச்சியாய் வாழ வைக்கிறது. அதைத்தேடி எங்கும் அலையாமல், பேராசை படாமல் இருப்பதைக்கொண்டு அளவாய் வாழ்ந்தாலே அமைதி கிடைக்கும் என்பதற்கு சாட்சியாய் ஹன்சா மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த அதிசய மக்களை சந்திப்பதற்காகவே உலகின் பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து, இவர்கள் வாழ்வுமுறையை கற்கின்றனர்.

Related Stories: