ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதில் பாரபட்சம் குஜராத்துக்கு 1200 மெட்ரிக் டன் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக ராஜஸ்தான் சுகாதார துறை அமைச்சர் ராகு சர்மா குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ளது. அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டரின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக ராஜஸ்தான் மாநில சுகாதார துறை அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து சுகாதார துறை அமைச்சர் ரகுசர்மா கூறுகையில், ‘‘ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒரே எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்துக்கு மத்திய அரசு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விநியோகம் செய்துள்ளது. ஆனால் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் ரன் ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவு ஆக்சிஜன் விநியோகிக்கப்படவில்லை என்றால் மக்களின் உயிரை எப்படி காப்பாற்ற முடியும். மாநிலத்துக்கு நாள்தோறும் 7லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தேவைப்படுகின்றது.

கொரோனா தடுப்பு மருந்தை சேமித்து வைப்பதற்கு தேவையான வசதிகள் உள்ளது. எனவே 15 நாட்களுக்கு தேவையான தடுப்பு மருந்தை வழங்கினால் ஏராளமான உயிர்களை காப்பற்ற முடியும்” என்றார். ஏற்கனவே மகாராஷ்டிராவுக்கு போதிய ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே பாஜ ஆளும் மாநிலங்களுக்கு ஒருமாதிரியாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வேறு மாதிரியாகவும் மத்திய அரசு கையாள்வதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories:

>