கொரோனா வைரசுக்கு எதிராக இரட்டை மாஸ்க் தரும் இரட்டிப்பு பாதுகாப்பு: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இரட்டை மாஸ்க் அணிவதால் இரட்டை பாதுகாப்பு கிடைக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாஸ்க் அணிதல் நாடு முழுவதும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் துணி மாஸ்க் அல்லது சர்ஜிக்கல் மாஸ்க்கையே அணிகின்றனர். மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட சர்ஜிக்கல் மாஸ்க் அதிக பாதுகாப்பானது என்றாலும் கூட அதோடு துணி மாஸ்க்கையும் சேர்ந்து இரண்டு மாஸ்க் ஆக அணிவதால் இரட்டை பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவ ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஜமா இன்டர்னல் மெடிசன் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், சர்ஜிக்கல் மாஸ்க்குடன், துணி மாஸ்க்கை சேர்ந்து அணிதால், முழுமையாக பொருந்தி எந்த விதத்திலும் வைரஸ் நமது சுவாசம் மூலம் உடலில் புகாமல் பாதுகாப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தலைமை வகித்த அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக்கழக இணை பேராசிரியர் எமிலி சிக்பெர்ட் பென்னட் கூறுகையில், ‘‘சர்ஜிக்கல் மாஸ்க் சிறந்த வடிகட்டும் திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டவை. ஆனாலும் அவை நம் முகத்தில் முழு கச்சிதமாக பொருந்துவதில்லை. மூக்கு, வாய் பகுதியில் சிறு இடைவெளிகள் மூலம் வைரஸ்கள் உட்புகுந்து விட வாய்ப்புள்ளது.

ஆனால் சர்ஜிக்கல் மாஸ்க்குடன் துணி மாஸ்க் அணிவதால், அவை முழு கச்சிதமாக பொருந்துடன் இரட்டை பாதுகாப்பை அளிக்கும்’’ என்றார். பொதுவாக, சர்ஜிக்கல் மாஸ்க் கொரோனா போன்ற வைரஸ்களை வடிகட்டுவதில் 40-60% செயல்திறன் கொண்டவை. துணி மாஸ்க்குகள் 40% செயல்திறன் கொண்டவை. இவை இரண்டையும் சேர்த்து அணிவதால், கூடுதலாக 20% பாதுகாப்பு கிடைக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இரு மாஸ்க்குகள் அணிந்தாலும், அவை தளர்வானவையாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு மாஸ்க்கையும் சரியான முறையில் அணிய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எங்கு அணிவது?

இரட்டை மாஸ்க்குகளை குறிப்பாக,

* ஷாப்பிங் மால் போன்ற அதிக கூட்டமுள்ள அல்லது சமூக இடைவெளி பின்பற்ற வாய்ப்பில்லாத இடங்கள்

* மருத்துவமனைகள்

* காற்றோட்டம் குறைவாக உள்ள உள்ளரங்குகள்

* பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றில் இரட்டை மாஸ்க் அணிதல் நல்லது.

எப்படி அணிவது?

* முதலில் சர்ஜிக்கல் மாஸ்க்குடன் அதன் மீது துணி மாஸ்க்கையும் அணிய வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

* 2 சர்ஜிக்கல் மாஸ்க் அணிய பரிந்துரைக்கப்படவில்லை.

* என்95 மாஸ்க் அணிவதாக இருந்தால், இரட்டை மாஸ்க் அவசியமில்லை.

Related Stories:

>