திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சுழி தொகுதியின் தேர்தலை ரத்துசெய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்கின் பின்னணி:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருச்சுழி தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். திருச்சுழி தொகுதியை பொறுத்தவரையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்துவைத்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் எம்.திருப்பதி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருச்சுழி தொகுதியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அப்போது பேசிய நீதிபதிகள், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதால் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்ய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே முடித்துவைத்திருப்பதால் இந்த வழக்கை தாங்கள் மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: