துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிப்பேன்: பலியானோர் குடும்பத்துக்கு மம்தா ஆறுதல்

மதபங்கா: ‘கூச் பெகார் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் 4ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில், கூச் பெகார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி வாக்குசாவடி மையத்துக்கு வெளியே பாஜ- திரிணாமுல் தொண்டர்கள் இடையே வன்முறை வெடித்தது. அவர்களை கலைப்பதற்காக மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் வன்முறை மேலும் பரவுவதை தடுக்க, அரசியல் கட்சித் தலைவர்கள் இங்கு வருவதற்கு 72 மணி நேர தடை  விதிக்கப்பட்டது.

இந்த கெடு முடிந்த நிலையில், தற்போது பல்வேறு கட்சித் தலைவர்கள் அங்கு சென்று, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், “இந்த படுகொலைக்கு காரணமானவர்களை  கண்டறிந்து விசாரணை நடத்தப்படும். சம்பவத்துக்கு காரணமானர்கள் அனைவரும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். இதே மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட முதல் முறை வாக்காளரான அனந்த பர்மன் குடும்பத்திற்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Related Stories: