(தி.மலை) ஏரி, கிணறுகளின் நீர்மட்டம் உயர்வு கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 26: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடரும் கோடை மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உள்ளது.தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், கோடை மழையும் முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. அதன்படி, பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கிறது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் கடும் வெயிலும், மாலை தொடங்கி இரவு நேரங்களில் கனமழையும் பெய்கிறது. குறிப்பாக, கடந்த வாரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அதேபோல், திருவண்ணாமலை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எதிர்பாராத நிலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்யும் கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல், ஏரி, குளங்கள், பாசன கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. ஆண்டுதோறும் வழக்கமாக, மார்ச் இறுதி வாரத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றத்தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1.80 லட்சம் பாசன கிணறுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கிணறுகளில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது.அதேபோல், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில், 106 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், 264 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீரும், 245 ஏரிகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, பின்சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவியாக அமைந்திருக்கிறது. மேலும், சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி, அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 570 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயத்துக்கு, தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.மேலும், அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில் தற்போது 114.20 அடியாகவும், நீர் கொள்ளளவு 6,237 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 56.90 அடியாகவும், கொள்ளளவு 643 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 110 அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 18.20 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 58.06 அடியாகவும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு, கோடைகால குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது….

The post (தி.மலை) ஏரி, கிணறுகளின் நீர்மட்டம் உயர்வு கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: