அண்ணாமலையார் கோயிலில் போலீஸ் கெடுபிடியால் பக்தர்கள் தவிப்பு திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் போலீஸ் கெடுபிடியால் பக்தர்கள் அவதிப்பட்டனர். திருவண்ணாமலையில் நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில், கிரிவலப்பாதை, நகரின் முக்கிய சாலைகள் என காணும் திசையெங்கும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில்களில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், பக்தர்களிடம் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம், ஒருசில போலீசார் கடுமையாக நடந்து கொண்டது வேதனையை ஏற்படுத்தியது.

மேலும், எளிதாக செல்லும் வழிகளை தடுப்புகள் அமைத்து அடைத்துவிட்டு, நீண்டதூரம் சுற்றிக்கொண்டுவரும் வகையில் திடீர் திடீரென தரிசன வரிசையை மாற்றி அமைத்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல், நகரின் பெரும்பாலான சாலைகளும், வீதிகளும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் தடை செய்யப்பட்டது. அதனால், அந்த வீதிகள் வழியாக இருசக்கர வாகனங்கள்கூட கடந்துசெல்ல முடியாமல் தவித்தனர். குறிப்பாக, வட ஒத்தைவாடை தெருவின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்திருந்ததால், நீண்ட தூரம் பக்தர்கள் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை காணப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது அவசியமானது என்றாலும், பக்தர்களிடம் ஒருசில போலீசார் கடுமையாக நடந்து கொள்வது, உழைக்கும் போலீசாரின் நற்பெயரை பாதிப்பதாக அமைந்திருக்கிறது என பக்தர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

The post அண்ணாமலையார் கோயிலில் போலீஸ் கெடுபிடியால் பக்தர்கள் தவிப்பு திருவண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: