விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது * சதவீதம் வாக்குகள் பதிவானது * சுட்டெரித்த வெயிலிலும் ஆர்வமுடன் வாக்களித்தனர் திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில்

திருவண்ணாமலை, ஏப்.20: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில், விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், நீண்டவரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்திய மக்களவையின் 18வது பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் நடந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, உணவு இடைவேளை எதுவும் இல்லாமல், மாலை 6 மணி வரை தொடர்ந்து நடந்தது.

அதையொட்டி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகளும், ஆரணி மக்களவைத் தொகுதியில் 1,760 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 31 வேட்பாளர்களும், ஆரணி மக்களவைத் தொகுதியில் 29 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகை ரசீது இயந்திரங்கள் (விவிபேட்) பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதிகபட்சம் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பாதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு, முறையான வாக்குப்பதிவு தொடங்கியது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில், வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான 274 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 2,216 வாக்குச்சாவடிகள் ‘வெப் காமிரா’ மூலம் ஆன்லைனில் கண்காணிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 100 டிகிரியை கடந்து கோடை வெயில் சுட்டெரித்தது. எனவே, காலையிலேயே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மீண்டும், மாலையில் வாக்காளர்களின் வருகை அதிகரித்தது. வழக்கம் போல இந்த தேர்தலிலும், ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்களே அதிக ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க வசதியாக, சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவரது சொந்த ஊரான சே.கூடலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளித்தார். அமைச்சருடன், அவரது மகன் எ.வ.குமரன் வாக்களித்தார். அதேபோல், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளி வாக்குச்சாவடியிலும், மாநில மருத்தவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

மேலும், திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய்பீம் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், கலெக்டர் பாஸ்கரபாண்டியன், அவரது மனைவியுடன் வந்து வாக்களித்தார். அப்போது, அங்கு வாக்களிக்க ஆர்வமுடன் காத்திருந்த முதன்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், திருவண்ணாமலை முன்னாள் கலெக்டரும், வேளாண் இயக்குனருமான முருகேஷ், அவரது மனைவியுடன் வந்திருந்து, திருவண்ணாமலை ஜெய்பீம் நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மேலும், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், அதிமுக வேட்பாளர் எம்.கலியபெருமாள், தேன்மாத்தூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாக்களித்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதியில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீதமும், காலை 11 மணி நிலவரப்படி 25.68 சதவீதமும், பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 52.74 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி சதவீமும் வாக்குகள் பதிவானது. அதேபோல், ஆரணி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி6.84 சதவீதமும், காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீதமும், பகல் 1 மணி நிலவரப்படி 41.74 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 54.46 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி சதவீதமும் வாக்குகள் பதிவானது.

அதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் விபரம் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சதவீதமும், ஆரணி மக்களவைத் தொகுதியில் சதவீதமும் வாக்குகள் பாதிவாகியுள்ளன. செங்கம் சட்டமன்ற தொகுதி பெரும்பாக்கம் கிராமத்தில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி குடும்பத்துடன் வாக்களித்தார். சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரிய கிளாம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு. தி.சரவணன் வாக்களித்தார்.

திமுக வேட்பாளர் எம்.எஸ் தரணிவேந்தன் நேற்று வந்தவாசி அடுத்த எரமலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் தனது குடும்பத்துடன் நின்று வாக்கு செலுத்தினர். வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் எம்எல்ஏ எஸ் அம்பேத்குமார் வாக்கு செலுத்தினார். தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தள்ளாத வயதில் முதியவர் வாக்கு செலுத்தினார். துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயக கடமையாற்றிட வாக்களிக்க ஆர்வத்துடன் மூதாட்டி வந்தார்.

The post விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது * சதவீதம் வாக்குகள் பதிவானது * சுட்டெரித்த வெயிலிலும் ஆர்வமுடன் வாக்களித்தனர் திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் appeared first on Dinakaran.

Related Stories: