சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 1800 தூய்மைப்பணியாளர்கள் அயராத உழைப்பு டன் கணக்கில் குப்பை கழிவுகள் அகற்றம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை, ஏப்.25: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் முடிவடைந்த நிலையில், 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்திய தூய்மைப்பணியாளர்களின் உழைப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, நேற்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். விடுமுறை இல்லாத நாளில் சித்ரா பவுர்ணமி அமைந்ததால், பக்தர்கள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், இதுவரை எப்போதும் இல்லாத அளவில் பக்தர்களின் வருகை அதிகரித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையையும், நகரையும் தூய்மையாக வைத்திருந்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. அதோடு, மக்கும் தன்மையில்லாத, சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும், கிரிவலப்பாதையில் குப்பை கழிவுகளும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் என டன் கணக்கில் கடந்த இரண்டு நாட்களில் குவிந்தன. மேலும், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்தும், வேறு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கும் தன்னார்வலர்கள், அந்த இடத்தை தூய்மைப்படுத்தி செல்ல வேண்டும் என நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், அன்னதானம் வழங்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான பாக்குமட்டை தட்டுகளும், வாழை இலைகளும் குவிந்திருந்தன. இந்நிலையில், இரண்டு நாட்கள் கிரிவலம் முடிந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே 1800 தூய்மைப்பணியாளர்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட குப்பை கழிவுகளை 20க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், மினி லாரிகளில் கொண்டுசென்று நகருக்கு வெளியே சேர்த்தனர்.

நேற்று 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியது. சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி தார் சாலை உருகியது. ஆனாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தூய்மைப்பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தியது அனைவரது பாராட்டையும் பெற்றது. மேலும், தொடர்ந்து தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் கலெக்டர் ரிஷப் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், தூய்மைப்பணியாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் முடிந்து சொந்த ஊர் திரும்பிய பக்தர்களின் வாகனங்களால், திருவண்ணாமலை- திண்டிவனம், திருவண்ணாமலை – வேலூர் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று பகல் 11 மணியுடன் முடிந்தது. பின்னர், வழக்கமான பஸ் நிலையத்துக்கு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. எனவே, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பஸ்கள் நகருக்குள் பயணித்ததால், பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் வரிசையாக ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது. குறிப்பாக, பஸ் நிலையம் ரவுண்டானா முதல், அண்ணா நுழைவு வாயில் வரை மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 1800 தூய்மைப்பணியாளர்கள் அயராத உழைப்பு டன் கணக்கில் குப்பை கழிவுகள் அகற்றம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் appeared first on Dinakaran.

Related Stories: