தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்றுடன் ஓய்வு..!

புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர் நாளை புதிய இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்க வாய்ப்புள்ளது. தமிழகம் உட்பட 5 மாநில தேர்தலுக்கு மத்தியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதே வழக்கம் என்ற அடிப்படையில், சுனில் அரோராவிற்கு அடுத்த உயர்பதவியில் உள்ள சுஷில் சந்திரா பெயரை மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.

இதற்கான உத்தரவு எந்த நேரத்திலும் பிறப்பிக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அவ்வாறு சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டால், இப்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோரா பதவிக் காலம் முடிவடையும் நாளுக்கு (இன்று) அடுத்த நாளான நாளை (ஏப். 13) அவர் பதவியேற்க வாய்ப்புள்ளது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் 2022ம் ஆண்டு மே 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருடைய தலைமையில், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

இதில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் ஆட்சிக் காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. அதேபோல் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை காலம் அடுத்தாண்டு மே 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்பதற்கு முன்பாக, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக சுஷில் சந்திரா பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: