வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்

மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

வீட்டிலிருந்து செய்யக்கூடிய சிறு தொழில்கள் அதிகம் உள்ளன. அந்த வகையில் நிறைவான லாபம் தரக்கூடிய தொழிலில் மெழுகுவர்த்தி தயாரிப்பும்  ஒன்று. அதிகபட்சமாக தீபாவளி, கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகிய நாட்களிலேயே  பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தாண்டி வீடுகளில் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக உள்ளது  மெழுகுவர்த்தி.

ஏனெனில், மழை, வெயில் காலம் என்பது மட்டுமல்லாமல் சாதாரண நாட்களில்கூட இன்று மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு  மின்தடை ஏற்படும்போது முதலில் நாம் தேடுவது மெழுகுவர்த்தியைத்தான். தொழில்நுட்பம் பெருகிவரும் நிலையில் இன்வெர்ட்டர் மற்றும் பவர்  பேட்டரி என்பது மின்தடையை சமாளிக்க பயன்படுத்துகிறார்கள் என்றாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு பொருளாக மெழுகுவர்த்தியின் தேவை  இருந்து வருகிறது.

‘‘மெழுகுவர்த்தி தயாரிப்புக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எனது தாயார் கடந்த 15  ஆண்டுகளாக மெழுகுவர்த்தி உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறார். அதனால் எனக்கும் இத்தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டது. பல் மருத்துவராக  இருந்தாலும் இன்று சென்னை, மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, ராகவாநகரில், ‘எஸ்.பி. கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் பகுதி நேரத் தொழிலாக  செய்துவருகிறேன். மற்றவர்கள் பயன் பெற பயிற்சியும் அளிக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் ஜனனி சிவப்பிரகாசம்.

இத்தொழிலுக்கான முதலீடு, தயாரிப்புமுறை, விற்பனை வாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ‘‘மெழுகுவர்த்தி  தன்னைத்தானே அழித்துக்கொண்டு அனைவருக்கும் வெளிச்சம் தரக்கூடியது. சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின்போது மெழுகுவர்த்தியின் உதவியால்  பலர் நன்மை அடைந்ததைக் கண்டிருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுபவர்கள் மறக்காமல் கொடுத்த பொருட்களில் மெழுகுவர்த்தியும் ஒன்று.  இந்த மெழுகுவர்த்தியில் தற்போது பல வகைகள் வந்துவிட்டன.

வாசனைத் திரவியங்கள் கலந்த மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கும்போது ஓமம், யூகலிப்டஸ் தைலம் கலக்கப்பட்ட  மெழுகுவர்த்தி. பாத்ரூமில் கொசு மற்றும் பூச்சிகள் வராதவாறு இருக்க கொசுவிரட்டி மெழுகுவர்த்தி, அறை முழுவதும் நறுமணம் வீசக்கூடிய நறுமண  மெழுகுவர்த்தி, அழகுக்காக வைக்கப்படும் ஜெல் மெழுகுவர்த்தி என பலவகைகள் உள்ளன. அழகுக்காக வைக்கப்படும் ஜெல் மெழுகுவர்த்தி சமீப  காலமாகப் பிரபல மாகி வருகின்றது. இவற்றை விருந்து, நிறுவனங்களின் விழாக்கள், பெரிய கடைகளிலும், வீடுகளிலும் அலங்காரப் பொருளாக  வைக்கிறார்கள்.

மிதக்கும் மெழுகுவர்த்தி என்பது நவராத்திரி போன்ற சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் இவ்வகை மெழுகுவர்த்தி அலங்காரப்  பொருளாக மட்டும் இல்லாமல் ஒளி வீசவும் வீட்டில் வாசனைகளை பரப்பக்கூடியதாகவும் இருக்கிறது. மெழுகுவர்த்தியை தயார் செய்வதற்கு மெழுகுத்  துகள்களின் விலை சுமார் ரூ.150 முதல் ரூ.750 வரை ஆகும். அச்சுக்களின் விலை (Mould) ரூ.200. சாயங்கள் ரூ.50. ஜெல் மெழுகு  ரூ.400. திரி  கண்டு ரூ.50. வாசனைத் திரவியம் ரூ.500 என குறைந்தபட்ச முதலீடாக சுமார் 2000 முதல் 5000 வரை போதுமானது.

மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு  ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான  பாலிதீன் கவர்கள் இவைதான் இத்தொழிலுக்கான மூலப்பொருட்கள். நமது வீட்டு சமையல் அறையே போதுமானது. ஒரு பெரிய பாத்திரத்தில்  தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

மற்றொரு சிறு பாத்திரத்தில் பெரிய பாத்திரத்தில் எளிதில் நுழையக்கூடிய பாத்திரத்தில் மெழுகு துகள்களைத் தேவையான அளவு போட்டு  கரண்டியால் கிளற வேண்டும். மெழுகு உருகிய பின் அதில் சாயங்களை சேர்க்க வேண்டும். அதனுடன் எந்த வகையான மெழுகுவர்த்தி தயாரிக்கப்  போகிறோமோ அந்த வாசனைத் திரவியங்களை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய்  எண்ணெயை லேசாக தடவி, உருக்கிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும்,  அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த  வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக உருக்கிய மெழுகை சிறு அகல் விளக்குகளிலோ அல்லது சிறு  மண்பாண்டங்களிலோ ஊற்றலாம். அதனை மேற்கொண்டு அவரவர் கற்பனைக்கேற்ப அலங்கரித்துக் கொள்ளலாம்.

வெள்ளை நிறங்களில் மட்டுமில்லாமல், விரும்பிய வண்ணத்தில் மற்றும் வடிவத்தில் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு  ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில்  சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும். தயாரித்த மெழுகுவர்த்தியை அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து அவர்கள்  பயன்பாட்டைப் பொறுத்து அவர்கள் கூறும் கருத்திற்கேற்ப பல வண்ணங்கள், வாசனைத் திரவியங்களைக் கொண்டு அவரவர் கற்பனைக்கேற்ப மாற்றி  அமைக்கலாம்.

தயாரித்த மெழுகுவர்த்தியை வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக   டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது.  வீட்டிலிருந்தே தொழில் செய்ய நினைக்கும் பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ரூ.5,000  முதலீட்டில் தொடங்கப்படும் இத்தொழில் நம் உழைப்பு மற்றும் ஈடுபாடு இருந்தால் நிரந்தரமாக மாதம் சுமாராக ரூ.15,000-த்தில் இருந்து சம்பாதிக்க  முடியும்.

மேற்கொண்டு அவரவர் வருமானத்தைப் பெருக்குவது திறமையைப் பொறுத்தது. பிரதமர் சுயவேலை வாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம்,  மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவிகித மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன்  தொகையில் 35 சதவிகிதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவிகிதமும், பெண்களுக்கு 35 சதவிகிதமும் மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இத்தொழிலை  செய்வதன் மூலம் அரசு நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழக அரசு சிறு மற்றும் குறு குடிசைத் தொழில்களை ஆதரித்து மானியம்,  கடன் முதலியவற்றை வழங்கி வருகிறது. அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழில்’’ என்றார் ஜனனி  சிவப்பிரகாசம்.

தோ.திருத்துவராஜ்

Related Stories:

>