ஊழல் புகாரில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா செய்துள்ளார். காவல் அதிகாரியிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிக்கிய அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மும்பையில் காவல் ஆணையராக இருந்தவர் பரம்பீர் சிங். முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டுகளுடன் கார் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் ஊர்க்காவல் படை டி.ஜி.பியாக மாற்றப்பட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட 2 நாட்களில் பரம்பீர் சிங், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மிகப்பெரிய லஞ்சப் புகாரை சுமத்தியிருந்தார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி சச்சின் வாசிடம், அனில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஓட்டல்கள், பார்கள், நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்துக் கொடுக்கச் சொன்னதாக பரம்பீர் சிங் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் 100 கோடி மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டதாக, முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர், கூறியது, மகாராஷ்டிரா  அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: