தமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனாக குவிப்பு: ஊழல் மூலம் கருப்பு நிலக்கரி வெள்ளை பணமாக மாறியது; தரமற்ற பொருட்கள் வாங்கி மின்வாரியத்துக்கே ‘ஷாக்’ கொடுத்த ஆளுங்கட்சி; வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கமிஷன் கரன்சி பரிமாற்றம்

தமிழக மின்வாரியம் இன்று 45 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதற்கு முக்கிய காரணம் திறமையற்ற நிர்வாகம். இந்தியாவில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நாட்டின் பல மாநிலங்களுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. அதன் மூலம் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறி தன் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டை வாரி வழங்குகிறது. மேலும் மரபுசாரா எரிசக்தி உள்பட மரபு சார்ந்த மின்உற்பத்தி மூலம் லாபத்தை கொட்டி குவிக்கிறது. ஆனால் நிலம், ஆட்கள், இயந்திரங்கள் என மின் உற்பத்திக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை கொண்டுள்ள தமிழக மின்வாரியம் மட்டும் நஷ்டத்துக்கு போனது எப்படி. காரணம் அனல், புனல், காற்று, அணுசக்தி மின்சாரம் போன்றவற்றில் நவீன கட்டமைப்பை கொண்டு வராமல், இருப்பதை வைத்து மின் உற்பத்தியை தொடர்ந்து கொண்டிருப்பது தான். 7 கோடிக்கும் மேல் உள்ள ஒரு மாநிலத்தில் உள்ள அரசுக்கு, சிறிய பரப்பளவில் மின்உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் மின்சாரத்தை விற்று கோடிக்கணக்கில் தன் வங்கி சேமிப்பை உயர்த்துகிறது என்றால், மின்உற்பத்தியில் நவீனத்துவத்தை மேற்கொள்ளாத தமிழக மின்வாரியத்தின் ‘டீலிங்’ கொள்கை தான் காரணம். மின்உற்பத்தி குறைந்தால் மக்கள் எதிர்ப்பை சமாளிக்கவே தனியாரிடம் மின்சாரத்தை வாங்கினோம் என்று ‘கதை’யளக்க மந்திரிக்கும், அதிகாரிகளுக்கும் உதவும் என்பதே நிதர்சனமான உண்மை.

* சாம்பலாகும் மக்கள் பணம்

அனல் மின்நிலையத்தில் மின்உற்பத்திக்கு சாதாரண அடுப்பு கரியை போட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். மின்உற்பத்திக்காகவே நிலக்கரி சுரங்கங்கள், மத்திய கனிமவளத்துறை தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ளது. அங்கிருந்து நிலக்கரியை வெட்டி எடுத்து தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்படியும் நிலக்கரி போதுமானதாக இல்லாவிட்டால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலக்கரியிலும் உள்நாட்டிலேயே தனியாரிடம் இருந்து வாங்கும் நிலக்கரியிலும் தான் கோடிக்கணக்கில் ஊழல் பணம் கைமாறுவதாக மின்வாரிய சங்கத்தினர் கூறுகின்றனர். குறிப்பாக அனல் மின்சார உற்பத்திக்கு தேவையான தரமற்ற நிலக்கரியை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. விரைவில் அது சாம்பலாகி மக்களின் பணத்தையும் விழுங்கி விடுகிறது. ஆனால் தரமான நிலக்கரியை வாங்கியதாக கணக்கு காட்டுகின்றனர். இவை அனைத்தும் டெக்னிக்கலாக நடக்கும் முறைகேடு என்பதால், கமிஷன் மட்டும் பல கோடி வரும். இவை வெளிநாட்டில் கரன்சியாக மாறி ஆளும் வர்க்கம் அதிகாரிகளின் மணி பார்சை நிரப்பி விடுகிறது.

* உதவாத மின்உதிரி பாகங்கள்

மின்வாரியத்துக்கு தேவையான டிரான்ஸ்பார்மர்கள், கண்டக்டர்கள், ஒயர்கள், மின் மீட்டர்கள், ஆயில் உள்பட பல பொருட்கள் மின்வாரியத்துக்கு வாங்கப்படுகிறது. ஏதோ ஒரு குக்கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இல்லா இடத்தில் வைக்கப்படும் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் அதற்கான கருவிகள் தரமானதா என்பது யாருக்குமே தெரியாது. இதனால் வெயில் காலங்களில் உயர் அழுத்தம், தாழ்வழுத்தம் ஏற்படும்போது டிரான்ஸ்பார்மர் வெடிப்பதும், செயல் இழப்பதும், டிரான்ஸ் மீட்டர்கள் மக்கர் செய்வதும் வாடிக்கையாக போய்விட்டது. இப்படி மின்வாரியத்துக்கு நேரடியாக சப்ளை செய்பவர்கள் மற்றும் மின்வாரியத்தில் கான்டிராக்ட் எடுப்பவர்கள் தரமான உதிரி பாகங்களை வாங்கி மின்வாரியத்தில் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே. இந்த வகையில் உதிரி பாகம் கொள்முதலில் சில நூறு கோடிகள் ஆண்டுக்கு யார் கைக்கோ சொல்கிறது.

* புதுப்பிக்க தக்க மின்சாரம் அதிக கொள்முதல்

தமிழக மின்சார வாரியத்துக்கு 2015ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, 11 நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் இந்த 11 நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.4.91 முதல் ரூ.9.85 வரை விலை நிர்ணயித்திருக்கின்றன. அதே விலைக்கு வாங்க தமிழக மின்வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒரு யூனிட் ரூ.3.32 என்ற விலைக்கும், ஆந்திராவில் இந்திய நிறுவனம் ஒன்று ரூ.3.44 என்ற விலைக்கும் மின்சாரம் வழங்குகிறது. இதைவிட யூனிட்டுக்கு சராசரியாக ரூ.1.50 வரை கூடுதலாக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 15 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும்.  

அதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மொத்தம் 947 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியது. விதிகளின்படி ஒட்டு மொத்த மின்சாரத் தேவையில் 0.05% அளவுக்கு மட்டுமே புதுப்பிக்கவல்ல மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும். அதன்படி, 2016ம் ஆண்டு நிலவரப்படி 20 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும். பின்னர் இந்த அளவை தமிழ்நாடு மின்சார வாரியம் தன்னிச்சையாக 200 மெகாவாட்டாக (0.50%) உயர்த்தியது. காரணம் டீலிங் மூலம் பெரிய அளவில் கமிஷன் அடிப்பது தான். இந்த ஒப்பந்தம் மூலம் அதானி குழுமம் 648 மெகாவாட் உட்பட 947 மெகாவாட் மின்சாரம் வழங்கியது. அதானியிடம் இருந்து விதிகளை மீறிய முறைகேடான செயலாகும்.

* அதானியிடம் அதிக விலைக்கு கொள்முதல்

அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு ரூ.7.01 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 11.9.2015ம் தேதிக்குள் இந்த நிறுவனங்கள் மின்சார உற்பத்தியை தொடங்கினால் தான் இந்த விலை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டுக்கான விலையான யூனிட்டுக்கு ரூ.5.86 வீதம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால் யூனிட்டுக்கு ரூ.1.15 வீதம் 25 ஆண்டுகளுக்கு கூடுதல் விலை வழங்கப்படுவதால் ரூ.7,000 கோடி இழப்பு ஏற்படும். ஒட்டு மொத்தமாக அரசுக்கு ரூ.52,000 கோடி அளவில் மின்சார கொள்முதலில் இழப்பை ஏற்படுத்தும்.  

* கழிவாக கணக்கு காட்டி கரன்சி கொள்ளை

தரைவழி மின்சாரத்துக்கு வாங்கப்படும் கேபிள் டிரம்களிலும் மறைமுக ஊழல் நடந்துள்ளது. பல இடங்களில் கேபிள் வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் நீண்ட நாட்களாக போடப்பட்டிருக்கும். பின்னர் அதை கழிவு கணக்கில் எழுதி விட்டு மீண்டும் அதே கேபிள் டிரம்மை வாங்கியதாக 20 நாட்கள் கழித்து கணக்கு எழுதப்படும். இதிலும் ஊழல் கொடிகட்டிப் பறந்துள்ளது. தேர்தல் முடிவதற்குள் 20 ஆயிரம் கோடி டன் கொள்முதல் செய்ய அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற தலையீட்டால் தற்போது டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* வெளிநாட்டில் கரப்ஷன் கரன்சியாக மாறும் அதிசயம்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியிலும் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. அதில் கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி காற்றிலும், ஈரப்பதத்திலும் மாயமாகிவிட்டதாக பல கோடி கணக்கு எழுதப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் கமிஷனை கரன்சியாக அங்குள்ள ஏஜென்ட் மூலம் தருகிறது. நிலக்கரியையும் வெளிநாடுகளில் குறைந்த விலைக்கு வாங்காமல் அதிக விலைக்கு வாங்குவதாகவும், அதிலும் பல நூறு கோடி முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை எதுவுமே வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளில் மின்துறையில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க தனியாக விசாரணைக்கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அனல் மின்சார உற்பத்திக்கு தேவையான தரமற்ற நிலக்கரியை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. விரைவில் அது சாம்பலாகி மக்களின் பணத்தையும் விழுங்கி விடுகிறது. ஆனால் தரமான நிலக்கரியை வாங்கியதாக கணக்கு காட்டுகின்றனர். இவை அனைத்தும் டெக்னிக்கலாக நடக்கும் முறைகேடு என்பதால், கமிஷன் மட்டும் பல கோடி வரும். இவை வெளிநாட்டில் கரன்சியாக மாறி ஆளும் வர்க்கம் அதிகாரிகளின் மணி பார்சை நிரப்பி விடுகிறது.

Related Stories:

>