ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எதிரொலி 2 ஐ.ஜி.க்கள் அதிரடி மாற்றம்: கோவை எஸ்.பி.யும் மாற்றப்பட்டார்; தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு தேர்தல் அல்லாத பணிகளை ஒதுக்கும்படியும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு, இன்னும் 5 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக அமைச்சர்கள் மீது தொடர் ஊழல் புகார்கள் மற்றும் கோஷ்டி மோதல்களால் பொதுமக்கள், ஆளுங்கட்சியினர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவான அலையும், அதிமுகவிற்கு எதிரான அலையும் வீசி வருகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் திமுக தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதனால் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால்தான் ஓரளவுக்கு  இடங்களைப் பிடிக்க முடியும். குறிப்பாக அமைச்சர்களே பணம் கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ளனர். இதற்காக அதிமுகவில் உள்ள மேற்கு மண்டல அமைச்சர்கள் இரண்டு பேரிடம் அக்கட்சியின் தலைமை பொறுப்புகள் ஒப்படைதுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு அமைச்சர்கள் மூலம் தான் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

பணத்தை பாதுகாப்பாக மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கும் பணியில் மேற்கு மண்டல 2 அமைச்சர்களுக்கு ஆதரவாக உள்ள 2 ஐஜிக்கள் உட்பட 3 காவல் துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. அந்த 3 காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்புடன் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்களிடம் பணம் பத்திரமாக வழங்கப்பட்டு வந்தன. சில மாவட்டங்களுக்கு காவல் துறை வாகனத்திலேயே பணத்தை பத்திரமாக கொண்டு சென்று அதிமுக நிர்வாகிகளிடம் தடையின்றி ஒப்படைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தொடர் புகார்கள் சென்றுள்ளது. ஒரு தொகுதிக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை செலவு செய்ய ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு அதற்கான பணத்தை 3 காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் தொகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க வடமாநிலங்களில் இருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. அவர்களை விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகிய 3 காவல் துறை அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அந்த 3 காவல் துறை அதிகாரிகளை தேர்தல் அல்லாத பணியில் மாற்ற வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அறிக்கை ஒன்றை அளித்தனர்.

அந்த அறிக்கையின்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 3 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அவர்களை மாற்றக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. அதற்காக தேர்தல் ஆணையத்தில் தீவிரமாக தமிழக அரசு முயன்று வந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகியோரை அதிரடியாக நேற்று இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அல்லாத பணியிடத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. 3 பேரையும் பணியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் உடனே விடுவித்துள்ளது.

அந்த உத்தரவில், மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம்.தாமூர், மேற்கு மண்டல ஐஜியாக அமல் ராஜ், கோவை மாவட்ட எஸ்பியாக செல்வ நாகரத்தினம் ஆகியோரை நியமிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளும் இன்று பிற்பகல் 1 மணிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐஜிக்கள் தினகரன், ஜெயராம், எஸ்பி அருள் அரசு ஆகிய மூன்று பேரையும் டிஜிபி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 3 பேருக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வேறு பதவி வழங்க கூடாது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருச்சியில் திமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று முன்தினம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த அருண், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இதே புகாரின் அடிப்படையில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Related Stories: