செவிலியர்களின் சோகம் நீக்கட்டும் இந்த ஊதிய உயர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

மருத்துவத் துறையில் இரவு பகல் பாராமல் சேவையாற்றும் செவிலியர்களின் தொண்டு மனப்பான்மை பெரும்பாலும் வெளியே தெரியாமலே போய்விடுகிறது. இத்தகைய சேவைக்கான அங்கீகாரமோ, அடிப்படையான பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வசதி, வாய்ப்புகளோ அவர்களுக்கு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலைமை சற்று மாறும் என்ற நம்பிக்கை சமீபத்தில் உருவாகியிருக்கிறது.

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் ஏறக்குறைய 12 ஆயிரம் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 7,700 சம்பளத்தைத் தவிர, அரசின் வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்கள் ஓய்வு பெறும்போது, சீனியாரிட்டி அடிப்படையில் தற்காலிக செவிலியர்கள் ஒவ்வொருவராக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதன் பின்னரே, இவர்களுக்கு அரசின் பிற சலுகைகள் கிடைக்க தொடங்கும். இந்தக் குறைபாட்டை சரி செய்யும் விதமாக, தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 7,700 ஆக இருந்த இவர்களின் தொகுப்பூதியம் இனி 14 ஆயிரமாக உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த ஊதிய உயர்வு நடப்பாண்டின் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் 500 ரூபாய் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சொல்லளவில் நின்றுவிடாமல், முறையாகச் செயல்படும் பட்சத்தில் நோயாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் செவிலியர்களின் வாழ்க்கையும் ஒளிமயமாகும் என உறுதியாக நம்பலாம்.         

- விஜயகுமார்

Related Stories: