ஒளிருது சுறா!

மின்மினி ஜொலிஜொலிப்பதைப் பார்த்திருப்போம். சமீபத்தில் நியூஸிலாந்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில், மூன்று வகை ஆழ்கடல் சுறாக்கள் ஒளிர்வதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பட்டத்துடுப்பு சுறா (kitefin shark), கருவயிற்று விளக்குச் சுறா (Black bellied Lantern shark), தெற்கு விளக்குச்சுறா (Southern Lantern Shark) என மூன்று வகை சுறாக்கள் ஒளிரும் தன்மை  கொண்டுள்ளனவாம். இவை மூன்றுமே 200 முதல் 1000 மீட்டர் ஆழம் வரை உள்ள ஆழ்கடல் பகுதியில் வசிக்கக்கூடியவை. இங்கு சூரியஒளி இருக்காது. ஆனாலும் இவை நீலமும் பச்சையும் கலந்த ஒரு  ஒளியை அவை வெளியிடுகின்றன.

பொதுவாக உயிர் ஒளிர்தல் என்பது லூசிஃபெரின் என்ற வேதிப்பொருளால் நிகழும். சில விலங்குகளின் உடலுக்குள் இருக்கிற சிலவகை பாக்டீரியா ஒளிர்வதாலும் இது நடக்கும். இந்த சுறாக்களின்  உடலில் அப்படி எதுவும் காணப்படவில்லை. ஆனால் ஆச்சர்யமாக இந்த ஒளிர்தல், ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.  ஒளியை உமிழும் போட்டோசைட்ஸ் என்கிற ஒரு வகை செல்கள்,  ஹார்மோன்களால் தூண்டப்படும்போது ஒளிர்தல் நடக்கிறது. ஆனால், உள்ளுக்குள் எந்த மாதிரியான வேதிப்பொருள் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிச்சயமாக, இது லூசிஃபெரின்  இல்லை என்பதை மட்டுமே விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதில், சுறாவின் பட்டத்துடுப்பு சராசரி நீளம் ஆறு அடி. ஒளிரக்கூடிய முதுகெலும்புள்ள உயிரிகளிலேயே மிகப்பெரியது என அறிவித்திருக்கிறார்கள். பிற வேட்டை விலங்குகளிடமிருந்தோ  இரையிடமிருந்தோ மறைந்துகொள்ளவும் அவற்றைக் குழப்பவும் இந்த ஒளி பயன்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

Related Stories:

>