எலிகளை ஒழித்தது எலித்தீவு!

அமெரிக்காவின் அலாஸ்கா கடலோரப் பகுதிகளில் தொடங்கி ரஷ்யா வரை நீள்கிறது ஒரு பிறை போன்ற தீவுத் தொடர். இதன் பெயர் அலூசியன் தீவுகள். இந்தத் தீவுச் சங்கிலியில் 14 மிகப் பெரிய  எரிமலைத் தீவுகளும் 55 குட்டித் தீவுகளும் உள்ளன. இதில் ஒன்றுதான் எலித் தீவு. இத்தீவுக்கு பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது. கி.பி.1700களின் தொடக்கத்தில் ரஷ்யாதான் இந்தத் தீவுகளுக்குள்  முதன் முதலாக நுழைந்தது.பிறகு பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இந்த வழியாக கடந்து செல்லும்போது இங்கே போய் வரத் தொடங்கின. சிக்கலான கடல் பாதை கொண்ட தீவுப்  பகுதி என்பதால் இங்கு கப்பல்கள் தரை தட்டி கவிழ்வது அடிக்கடி நடக்கும் சம்பவமானது. போதாக்குறைக்கு இரண்டு உலகப் போர்களின் போதும்

இந்தப் பகுதிகளில் கப்பல் விபத்து அதிகமாக நடந்தது. மூழ்கிய கப்பல்களில் இருந்து தப்பிய எலிகள் தீவுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யத் தொடங்கின. இந்த நிலத்தோடு எந்த வகையிலும்  சொந்தமில்லாத எலிகள் பறவைகளின் முட்டையை சாப்பிடுவது, குஞ்சுப் பறவைகளைச் சாப்பிடுவது என வேட்டையாடியதில் இந்தத் தீவின் பறவையினமே மெல்ல அழியத் தொடங்கியது. இதனால்  பறவைகளுக்கு உணவாகும் நத்தை போன்ற சிற்றுயிர்கள் கட்டுப்பாடு இல்லாமல் பெருகின.இதனால் இந்தத் தீவின் முக்கியமான தாவரங்கள் அழியத் தொடங்கின. கடந்த 2008ம் ஆண்டு இந்த எலிகளை  எல்லாம் ஒழித்துக்கட்ட திட்டமிடப்பட்டது. எலித்  தீவு என்ற பெயரும் ஹவாடக்ஸ் என்று மாற்றப்பட்டது. தற்போது வெறும் பத்தே ஆண்டுகளில் இந்த தீவு ஆச்சயர்யப்படும் வகையில் மீண்டுள்ளது.  இங்கு மீண்டும் மரம் செடிகள் செழிக்கின்றன. நத்தைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பறவைகளின் முட்டைகள் கபளீகரம் செய்யப்படாமல் இருக்கிறது. தீவெங்கும் பறவைகள் திரிந்துகொண்டிருக்கின்றன  என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

Related Stories:

>