திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடக்கம்: பகதர்கள் ஆரவாரம்

திருவாரூர்:  தமிழகத்தில் மரத்தால் மிகப்பெரிய அளவில் தேர்களை அழகுற அமைத்து அதன் மீது தெய்வ திருவுருவங்களை வைத்து வீதிகளில் பவனி வரச்செய்து பெருவிழாவாக எடுக்கும் மரபு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. சோழ மன்னர்களும், அவர்களுக்கு பிறகு விஜயநகர அரசர்களும் பல தேர்களை செய்து அளித்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. இவ்வாறு சிறப்பு வாய்ந்த தேர்களில் ஒன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் ஆகும்.

திருவாரூரில் பழங்காலத்தில் இருந்து ஆழித்தேரோட்டம் நடைபெற்றதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. கி.பி. 1748-ம் ஆண்டு கிடைத்த ஆவணத்தின் மூலம் தொடர்ந்து 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் தேர்திருவிழா நடைபெற்ற கொண்டு வருகின்றனர்.  உலா வந்த தேர் 1926-ம்ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின் போது ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலும் எரிந்து பழுதடைந்தது. பின்னர் தியாகராஜ பெருமான் தொண்டர்கள் அனைவரும் ஒன்று கூடி 1928-ம் ஆண்டு புதிய தேர் செய்ய முடிவு செய்து பொருளுதவி ஈட்டினர். இதையடுத்து 1928-ம் ஆண்டு புதிய தேர் கட்டுமான பணி தொடங்கி 1930-ம் ஆண்டு முழுவதுமாக தயாரானது.

பின்னர் 2-3-1930-ம் அன்று புதிய தேர் ஓட ஆரம்பித்தது. திருவாரூர் தேருக்குரிய தனித்த சிறப்பு வடிவமைப்பிலேயே இந்த தேரும் உருவாக்கப்பட்டது. 96 அடி உயரம் 220 டன் எடையுடன் கூடிய திருவாரூர் ஆழித்தேர் காண்போரை வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றதாகும். எனவே பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி முக்கிய வீதிகளில் ஆழித்தேர் இன்று பவனி வருகிறது. இந்த தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தியாகராஜ பெருமானை தரிசனம் செய்து ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: